| 2727. | நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண் | | | நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில் | | | தோற்றவன்காண் தோற்றக் கேடில்லா தான்காண் | | | துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம் | | | போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண் | | | பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை | | | ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி | | | ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே. | 3 |
3. பொ-ரை: திருநீறு அணிந்தவனாய், நீரும் தீயும் ஆனவனாய், கனமான மழுப்படை உடுக்கை அக்கினி இவற்றைக் கைகளில் ஏந்தியவனாய்த் தனக்குப் பிறப்பும் இறப்பும் இல்லாதவனாய், ஒப்பற்றவனாய், தன்னைத் துணையாகக் கொண்டு தொழும் அடியவர்களுடைய உள்ளத்தைப் பாதுகாப்பவனாய், புகழ்கள் படைத்தவனாய், விரிந்த சடைமீது புள்ளிகளை உடைய பாம்பினையும் கங்கையையும் ஏற்றவனாய், உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான். கு-ரை: நிறை மழு - வெம்மை நிறைந்த மழு. தமருகம் - துடி (உடுக்கை). தோற்றவன் - தோன்றுதலுடையவன்; தோற்று, முதனிலை திரிந்த தொழிற்பெயர்; அகரம் சாரியை. "தோற்றக் கேடு" உம்மைத் தொகை; 'தோன்றுதலும் அழிதலும்" என்பது பொருள். துணை இலி - ஒப்பு இல்லாதவன்; "தனக்குவமை இல்லாதான்" (குறள் - 7.) என்றார் திருவள்ளுவ நாயனாரும். 'அவனே துணை என்று' என்க. "உள்ளம்" என்புழி, இரண்டனுருபு விரிக்க. போற்றவன் - காத்தல் உடையவன்; என்றது, நீங்காதிருப்பவன்' என்றவாறு. "புகழ்கள்" என்றது, 'எல்லாப் புகழ்களையும்' என்றபடி. "படைத்தான்" என்பதில், 'படைத்தல்' என்பது, "படைப்புப் பல படைத்துப் பலரோடுண்ணும் - உடைப் பெருஞ் செல்வர்" (புறம் - 188.) என்புழிப்போல 'உடையனாதல்' என்னும் பொருளது. 'கங்கைப் புனலும்' என மாற்றியுரைக்க. 'பொறியரவம் விரிசடைமேற் புனலங் கங்கை' எனப்பாடம் ஓதுதல் சிறக்கும்.
|