பக்கம் எண் :

986
 
2728.தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத்

தத்துவன்காண் மலைமங்கை பங்கா என்பார்

வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண்

வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணு ளோர்க்கும்

சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத்

திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம்

ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி

ஏகம்பன் காண் அவன்என் எண்ணத்தானே.

4

2729.அடுத்தானை யுரித்தான்காண் * *

* * * * * * *

5


4. பொ-ரை: உலகிற்குத் தாயாய், தன்னொப்பார் இல்லாத தத்துவனாய்; பார்வதி பாகனாய், அடியவர்கள் வாக்கில் இருப்பவனாய், இனி வரக்கூடிய பிறவி நோயைத் தீர்ப்பானாய், உலகியலிலேயே ஈடுபடும் தன்னை நினையாத தேவர் தானவர் மக்கள் ஆகியோருக்குத் தூரத்திலுள்ளவனாய், மனமாரத் திருவடியை விரும்பித் தியானித்து எழுபவர் உள்ளத்தில் பொருந்தியவனாய், உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான்.

கு-ரை: தாயவன் - தாயாய் இருப்பவன். வாயவன் - வாயின் கண் இருப்பவன்; என்றது, 'அவர்சொல்லின்கண் விளங்கி நின்று பயன் தருபவன்' என்றதாம்; இதனால், 'இறைவன் அடியார் நிறை மொழி மாந்தராய் விளங்குதல் இவ்வாற்றான்' என்பது விளக்கியருளப்பட்டது. "வரும்" என்றது, 'வினையால் பிறப்பும், பிறப்பால் வினையும் எனக் காரண காரியத் தொடர்ச்சியாய் முடிவின்றி வருகின்ற' என்றவாறு. பிறவியாகிய நோய்' என்க. வானவர் - தேவர்; தானவர் - அசுரர். மண்ணுளோர் - மக்கள்; 'உயர்திணையாகிய இவர் அனைவர்க்கும் எட்டாதவன்' என்றதாம். சித்தம் ஆர - மனம் இன்பத்தினால் நிரம்ப. "உள்கி நினைந்து" என்பது ஒரு பொருட்பன் மொழி. ஏயவன் - பொருந்துதல் உடையவன்.

5. பொ-ரை: தன்னைக் கொல்ல நெருங்கி வந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவன்.

கு-ரை: இத்திருப்பதிகத்தின் ஐந்தாம் திருத்தாண்டகத்துள், "அடுத்தானை உரித்தான்காண்" என்னும் ஒரு தொடரையன்றி, ஏனைய பகுதிகள் கிடைத்தில;