பக்கம் எண் :

987
 
2730.அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்

ஐயாறும் இடைமருதும் ஆள்வான் தான்காண்

பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள்

பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்

சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந்

தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க

இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி

ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே.

6


அத்தொடர் இத்தலத்து அருளிய மற்றொரு திருப்பதிகத்தின் தொடக்கமாகிய "அடுத்தானையுரித் தானை" (தி.4. ப.7. பா.10.) என்னும் தொடரோடு ஒருங்கு ஒத்து நிற்கின்றது.

6. பொ-ரை: கூரிய வாயை உடைய அம்பினாலே மும்மதிலையும் அழித்தவனாய், ஐயாறும், இடைமருதும் ஆள்பவனாய், பகைவரைப் பழித்தவனாய், அடியார்களுக்குத் துணையாய் இருப்பவனாய், பாம்பினை வில் நாணாகக் கொண்டவனாய், தலையில் கங்கையைச் சுழன்று தங்கச் செய்தவனாய், தன் திருவடிகளை வழிபட்ட பகீரதனுக்காக உலகில் ஒடுமாறு கங்கை நீரைச் சிறிது இறக்கியவனாய், உள்ள எழில் ஆரும் பொழில் ஆரும் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான்.

கு-ரை: 'அம்பால் அழித்தவன்' எனவும், 'அடையாரைப் பழித்தவன்' எனவும், 'முடிக்கண் கங்கை சுழித்தவன்' எனவும் கூட்டுக. அயில்வாய் - கூர்மையான வாயினை யுடைய; 'கூர்மை வாய்ந்த' எனலுமாம். ஐயாறும், இடைமருதும் சோழநாட்டுத் தலங்கள். அடையார் - தன்னை அணுகாதவர். பழித்தலாவது, விரும்பாமை; முன்னின்று அருளாமை. பற்றவன் - துணையாய் இருப்பவன்; அகரம், சாரியை. "புற்று அரவம்" என்றது இன அடை. நாண் - அரைநாண். சுழித்தவன் - அடக்கியவன். "முனிவர்க்கா" என்றது, 'அவர்கள் முழுகித் தவஞ்செய்தற் பொருட்டு' என்றவாறு. இழித்தவன் - இறக்கியவன்; இழித்ததும் கங்கையை என்க; 'சடையில் அடக்கிய கங்கையைப் பகீரதன் முன்னிலையாகப் பலர்க்கும் பயன்படுமாறு பூமியில் சிறிது விடுத்தவன்' என்றவாறு; சிவபிரானை, கங்கையைச் சடையில் தரித்த நிலைபற்றி, 'கங்காதர மூர்த்தி' எனவும், அக்கங்கையைச் சிறிது நிலத்தில் விடுத்தநிலைபற்றி, 'கங்கா விசர்ச்சன மூர்த்தி' எனவும் கூறுவர்.