பக்கம் எண் :

991
 
2735.அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட

ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கை

செறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் தான்காண்

திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையில்

பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து

பொருகயிலை எடுத்தவன்தன் முடிதோள் நாலஞ்

சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி

ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

11

திருச்சிற்றம்பலம்


அதனை "அதள்" என்றது பொதுமை நீக்கிச் சிறப்பித்தது என்க; எனவே, 'அதளாகிய உரி' என விரிதல் பெறப்பட்டது; போர்த்தல், ஈண்டு மேலாடையாக இடுதல்; புலித்தோலைச் சிவபிரான் தன் அரையிற் கட்டுதலேயன்றி, மேலாடையாக அணிதலும் சில விடத்துக் கூறப்படுதல் அறிக. "என்று இயம்பி" என்றருளினாராயினும், 'இன்னோ ரன்ன புகழை இயம்பி' என்பதே கருத்தாகக் கொள்க. அழுதல் - கண்கலுழ்தல். அளிப்பான் - அவர்க்கு வேண்டுவன ஈவான்; அன்றி, 'அழுவாரை' என உருபு மயக்கமாகக் கொண்டு, 'காப்பான்' என்றுரைத்தலுமாம். "நடம்" என்றது, துணங்கைபோல்பவற்றை. 'பூதத்தை உடைய அம்மான்' என்க. அற்புதன் - அதிசய நிலையினன். சொற்பதம் - சொல்லினது நிலை; உம்மை. சிறப்பு.

11. பொ-ரை: பிரமன் தலை ஒன்றை அறுத்தவனாய், தேவர் வேண்ட ஆழ்ந்த கடலின் விடத்தை உண்டு, கங்கையைச் சடையில் அடக்கியவனாய், தேவர்களுக்கும் தேவனாய், எண்திசையும் தொழுது வணங்குமாறு கலைமானைக் கையில் தாங்கியவனாய், தன் இருப்பிடமாகிய கயிலை மலையை அசைக்கவந்து, அதனைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் நசுக்கியவனான, எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.

கு-ரை: செறுத்தான் - அடக்கினான். 'ஏனைய உயிர்கட்கேயன்றித் தேவர்க்கும்' எனப் பொருள் தருதலின், 'தேவர்க்கும்' என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். கலை மான் - ஆண் மான்.