கயிலை அசைந்தமையால் உலகம் நடுங்கியது ஆகலின், 'புகலிடத்தை நலிய வந்து கயிலை எடுத்தவன்' என்றருளினார். இனி, 'உலகை வருத்துதற்கு என்றே பிறந்து, கயிலையை எடுத்தவன்' என்றுரைத்தலுமாம். 'புகல் இடம்' என்பது, 'வீட்டு நெறியை அடைய வேண்டுவார் புகுதல் உடைய இடம்' என, நிலவுலகத்தைக் குறித்து நின்றது. "இந்தப் பூமி - சிவன் உய்யக் கொள்கின்றவாறு" (தி.8 திருவா. திருப்பள்ளி. 10.) எனவும், "வானிடத்தவரும் மண்மேல் வந்தரன் றனையர்ச் சிப்பர்" (சிவஞான சித்தி. சூ. 2. 92.) எனவும் அருளியன காண்க. 'பொரு கயிலை" என்றது, 'அவனுக்குத் தடையாய் நின்ற கயிலை' என்றவாறு. இறுத்தான் - நெரித்தான். திருநாவுக்கரசர் புராணம்
| சீர்வளரு மதிற்கச்சி நகர்த்திருமேற் றளிமுதலாம் | நீர்வளருஞ் சடையவர்தாம் நிலவியுறை ஆலயங்கள் | ஆர்வமுறப் பணிந்தேத்தி ஆய்ந்ததமிழ்ச் சொன்மலரால் | சார்வுறுமா லைகள்சாத்தித் தகுந்தொண்டு செய்திருந்தார். |
அந்நகரில் அவ்வண்ணம் அமர்ந்துறையும் நாளின்கண் | மன்னுதிரு மாற்பேறு வந்தணைந்து தமிழ்பாடிச் | சென்னிமிசை மதிபுனைவார் பதிபலவுஞ் சென்றிறைஞ்சித் | துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்தபெருங் காதலினால். |
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத்தான் எனப்போற்றிப் | பாகம்பெண் ணுருவானைப் பைங்கண்விடை உயர்த்தானை | நாகம்பூண் உகந்தானை நலம்பெருகுந் திருநீற்றின் | ஆகந்தோய் அணியானை அணைந்துபணிந் தின்புற்றார். | -தி.12 சேக்கிழார். |
|