பக்கம் எண் :

993
 

65. திருக்கச்சி ஏகம்பம்

பதிக வரலாறு:

இத்திருப்பதிக வரலாற்றினை 277ஆம் திருப்பதிக வரலாற்றிற் காண்க.

குறிப்பு: இத்திருப்பதிகமும், மேலைத்திருப்பதிகத்தோடு ஒரு தன்மைப் பட்டது; இவ்வாறு இரண்டு திருப்பதிகங்கள் ஒரு தன்மையனவாகக் காணப்படுதல் அரிதேயாம்: "ஐயாறன் அடித்தலமே' என முடியும் திருவிருத்தங்கள் இருபது உடைய திருப்பதிகம். (தி.4. ப.92.) இரண்டாகக் கொள்ளப்படாது, ஒன்றாகவே கொள்ளப்படுதல் கருதத் தக்கது. இதனாலும் சுவாமிகளுக்குத் திருவேகம்பத்துள் உள்ள பேரார்வம் புலனாகும்.

திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 278

பதிக எண்: 65

திருச்சிற்றம்பலம்

2736.உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க

ஓங்காரத் தொருவன்காண்உணர் மெய்ஞ் ஞானம்

விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண்

வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே

தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்

திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்

எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி

ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

1


1. பொ-ரை: பார்வதி கண்டு அச்சத்தால் தளருமாறு, வலிய யானையின் தோலை உரித்தவனாய், ஓங்காரத்தால் உணர்த்தப்படுகின்ற பரம் பொருளாய் மெய்ஞ்ஞானத்தை விரித்தவனாய், நான்கு வேதங்களையும் ஓதுபவனாய், உலகில் பல உயிர்களையும் ஊழ்வினைப்படி படைத்தவனாய், எங்கும் சிறுதெய்வங்களாகவும் தோன்றிப் பரந்திருப்பவனாய், முப்புரங்களும் சாம்பலாகுமாறு வில்லால் எரித்தவனாய், அழகு நிறைந்த சோலைகள் நிரம்பிய கச்சி ஏகம்பன் என் எண்ணத்தில் உள்ளான்.