பக்கம் எண் :

998
 
2742.உமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்

உகந்தொலிநீர்க் கங்கைசடை யொழுக்கி னான்காண்

இமய வடகயிலைச் செல்வன் தான்காண்

இற்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந் தான்காண்

சமயமவை யாறினுக்குந் தலைவன் தான்காண்

தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய

இமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி

ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

7


ஆகம் - உடம்பு. "பொடியாய் வீழ" என்றதற்கு, 'பொடியாய் வீழ்வது போல வீழ' என உரைக்க. சருகுகளால் பந்தர் இட்ட சிலந்தியைச் சிவபிரான் அரசனாக்கிய வரலாற்றை, தி.12 பெரியபுராணத்துக் கோச்செங்கட் சோழ நாயனார் புராணத்துட் காண்க.

7. பொ-ரை: பார்வதி பாகனாய், மகிழ்ந்து கங்கையைச் சடையில் ஒடுக்கியவனாய், இமயமலையில் உள்ள வடகயிலை மலையில் உறையும் செல்வனாய், வீடுகள் தோறும் பிச்சைக்கு அலையும் வறியவனாய், ஆறுவகை வைதிகச் சமயங்களுக்கும் தலைவனாய், மெய்ப்பொருளாய், உயர்வற உயர்நலம் உடையவனாய்த் தனக்குத்தானே நிகராகும் தேவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.

கு-ரை: உகந்து ஒலி நீர்க் கங்கை - உயர்ந்து (மிகுந்து) ஒலிக்கின்ற நீர்வடிவாகிய கங்கை, 'கங்கையைச் சடையினின்றும் (பகீரதன் பொருட்டு) ஒழுகவிட்டான்' என்க. 'வட இமயக்கயிலை' என மாற்றுக. இமயக் கயிலை - இமயத்தின்கண் உள்ள கயிலை. 'இற் சென்று' என இயையும். 'இல்லங்கள் தோறும் பிச்சைக்குச் சென்று உழலும்' என்க. ஆறு சமயங்கள் மேலே காட்டப்பட்டன; எல்லாச் சமயங்களையும் உயிர்களின் அறிவு நிலைக்கேற்ப, இறைவன், உலகில் தோன்றி நிலவச் செய்தலின், அவன் ஒருவனே எல்லாச் சமயங்கட்கும் உண்மைத் தலைவன் என்க; 'எல்லாக் கலைகளுக்கும் சிவபிரானே முதல்வன்' என மேற் (பா.2 உரை) காட்டிய உபநிடத வாக்கியத்திற்கும் இதுவே கருத்து. இனி, 'உயிர்களின் அறிவு நிலைக்கேற்ப வேண்டும் நூல்களைத்தோற்றுவித்தலேயன்றி வேண்டாதனவற்றை இறைவன் அழித்தலும் செய்வன்' என்று அருளுகின்றது, திருவாசகம்; அதனை, "மண்ணும் விண்ணும் வானோருலகும் - துன்னிய கல்வி தோற்றியும்