பக்கம் எண் :

328
 

இக் கோயிலில் உள்ள கோபுரவாசலுக்குக் கண்டராதித்த கோபுரத் திருவாசல் என்று பெயர். சிவபெருமான் திருமுதுகுன்றமுடைய மகாதேவர் என்னும் திருப்பெயரால் குறிக்கப்பெற்றுள்ளனர். இத் திருக்கோயிலில் விக்கிரமசோழன் மடம் ஒன்று இருந்தது. இக்கோயிலில் நெய் அளக்கும் உழக்கு தேவாசிரியன் உழக்கு, தேவாசிரியன் கால் என்னும் பெயர்களால் வழங்கப்பெற்றிருந்தது. நந்தவனங்களுக்கு விக்கிரம பாண்டியன் நந்தவனம், இராஜாக்கள் நாயகன் திருநந்தவனம் என்னும் பெயர்கள் வைக்கப்பெற்றிருந்தன.

இக்கோயிலில் உள்ள பாண்டியமன்னர்களில் கல்வெட்டுக்களுள் சில விக்கிரமபாண்டியன் சந்தி, கோதண்டராமன் சந்தி இவைகளைக் குறிப்பிடுகின்றன.

இவ்வூர் முதலாம் இராஜராஜ சோழனது மகனாகிய கங்கைகொண்டசோழன் காலத்தில், வடகரை இராஜேந்திர சிங்கவளநாட்டு, இருங்கொளப்பாடிநாட்டு, பருவூர்க் கூற்றத்தில் அடங்கியிருந்தது. முதலாம் இராஜராஜன், பரகேசரிவர்மன் இராஜேந்திர சோழதேவன் I இவர்களின் கல்வெட்டுக்கள் நெற்குப்பையாகிய திருமுதுகுன்றம் எனக் குறிப்பிடுகின்றன.

அளிக்கப்பெற்ற நிவந்தங்கள் நெற்குப்பை ஊரவர்கள், திருமுது குன்றம் கோயிலில், திருப்பதியம் பாடுவார்க்கு நிலம் அளித்திருந்தனர். இச்செய்தியை முதலாம் இராஜராஜன் கல்வெட்டு உணர்த்துகிறது. பரகேசரிவர்மனாகிய திரிபுவன சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டு, திருமுதுகுன்றம் உடையார்க்கு, விருதராப்பயங்கரவளநாட்டு, மேற்காநாட்டு, பெண்ணாகடமாகிய முடிகொண்டசோழன் திறப்பில் 35 வேலி நிலம், தேவதான இறையிலியாகக் கொடுக்கப்பட்டிருந்தது. மற்றும் திருவாதிரைத் திருநாளுக்கும், பஞ்சகவ்வியத்திற்கும், நுந்தா விளக்குகளுக்கும், அயன காலங்களுக்கும் கோபுரம் திருமதில் மண்டபம் இவைகள் பழுது பார்ப்பதற்கும் நிலங்கள் அளிக்கப் பெற்றுள்ளன.

இக்கோவிலில் திருக்கடம்பந்துறை உடைய நாயனார், பிரமேசுவரமுடையார் இவர்களைப்பற்றிக் குறிக்கப்பெற்றுள்ளன. 1253 இல் கோப்பெருஞ்சிங்கன் ஹொய்சல அரசர்களுடைய தண்ட நாயக்கரை, பெரம்பலுரில் தோற்கடித்து, அவருடைய மனைவி, செல்வம் இவைகளையெல்லாம் தனதாக்கிக் கொண்டான். அப்பாவம் நீங்குவதற்கு முதுகுன்றத்து இறைவனுக்கு நிவந்தம் அளித்துள்ளான்.