72. திருமுருகன்பூண்டி முருகப் பெருமான் பூசித்த தலமாதலால் இப்பெயர் பெற்றது. ஈரோட்டிலிருந்து கோயமுத்தூருக்குச் செல்லும் இருப்புப் பாதையில் திருப்பூர் தொடர் வண்டி நிலையத்துக்கு வடக்கே எட்டு கி. மீ. தொலைவில் இருக்கின்றது. சேரமான் பெருமாள் நாயனார் கொடுத்தருளிய செல்வங்களுடன் சந்தரமூர்ததி நாயனார் இத் தலத்திற்கு அருகில் எழுந்தருளியபொழுது இறைவர் சிவபூதங்களை வேட வடிவத்தோடு அனுப்பி அவைகளைக் கவர்ந்து வர அருளினார். அதுபொழுது நாயனார் 'கொடுகுவெஞ்சிலை' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப்பாட இறைவர் அவைகளை நாயனார்க்கு மீட்டும் திருக்கோயில் வாயிலில் கொடுத்தருளிய பெருமையுடையது. நடராசர் சந்நிதி விசேடம். இறைவர் : முருகாவுடையார். இறைவி : ஆவுடை நாயகி. 1 கல்வெட்டு : இத்திருக்கோயிலில் கொங்குச் சோழரில் வீரராஜேந்திரன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. மற்றும் கோனேரின்மை கொண்டான், குலோத்துங்க சோழ தேவன், விக்கிரம சோழதேவன், இவர்களின் கல்வெட்டுக்களும் இருக்கின்றன. இவர்கள் கொங்குச் சோழர்களா? அல்லது சோழர்களா? என அறுதியிட்டு உரைத்தற்கு இல்லை. அக்கல்வெட்டுக்களன்றி வீர நஞ்சையராய உடையார் கல்வெட்டு ஒன்றும் உண்டு. இங்குக் குறித்த அரசர்களில் வீரராஜேந்திரன், குலோத்துங்க சோழதேவன் இவர்கள் காலங்களின் கல்வெட்டுக்கள் திருமுருகன் பூண்டிக் கோயிலில் விளக்கு எரிப்பதற்கு நிவந்தங்கள் அளித்ததைக் குறிப்பிடுகின்றன. விக்கிரம சோழன் கல்வெட்டு நந்தவனத்திற்கு நிலம் அளித்ததைக் கூறுகின்றது.
1. See the Annual Reports on South Indian Epigraphy for the year 1893. No. 571 - 579.
|