பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பாண்டியதேவன் காலத்திலும்; விசயநகர வேந்தர்களில் ஹரிஹரராயர் II, இரண்டாம் தேவராயருடைய தம்பி பிரதாப தேவராயர், வீரப்பிரதாபபுக்க ராயர், வீரப்பிரதாப மல்லிகார்ச்சுன தேவமகாராயர் இவர்கள் காலங்களிலும் செதுக்கப்ட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளன்றி, பார்த்திவேந்திரவர்மன் காலத்திலும் பொறிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுக்கள் உண்டு. மழவரையர் மகளாரும், கண்டராதித்த பெருமான் தேவியாரும், ஆகிய செம்பியன்மாதேவியார், புழற்கோட்டத்து அம்பத்தூர் நாட்டு அம்பத்தூர் ஊராரிடமிருந்து நிலம் வாங்கி, இத் திருமுல்லைவாயில் கோயிலுக்கு உத்தமசோழ தேவரின் பதினான்காம் ஆட்சியாண்டில் கொடுத்துள்ளனர். மண்டபத்துத் தூணில் உள்ள முதலாம் இராசேந்திரசோழ தேவன் கல்வெட்டு, அந்த மண்டபம் கட்டப்பட்டதைக் குறப்பிடுகின்றது. வட திருமுல்லைவாயில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்துக்கானப்பேரூர் நாட்டுக்கு உட்பட்டிருந்தது என்பதை ஜடாவர்மன் சுந்தரபாண்டிய தேவரின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. அம் மன்னனது 18ஆம் ஆண்டுக் கல்வெட்டு புழற்கோட்டம் விக்கிரம சோழவளநாடு என்னும்பெயர் எய்தியதைப் புலப்படுத்துகின்றது. 74. திருவலம்புரம் இது மேலப்பெரும்பள்ளம் எனவும் வழங்கப்பெற்று வருகின்றது. இறைவனது திருமுடியில் பள்ளம் இருப்பதால் இப்பெயர் பெற்றது என்பர். இது பூம்புகார்ப் பல்லவனீச்சரத்திற்குத் தென்மேற்கே 5 கி. மீ. தூரத்தில் இருக்கிறது. மயிலாடுதுறை சீகாழி ஆகிய ஊர்களிலிருந்து பூம்புகார் செல்லும் பேருந்துகளில் ஏறி இவ்வூரைக் குறிக்கும் கை காட்டியில் இறங்கிச் சிறிது தூரம் நடந்து சென்றால் ஆலயத்தை அடையலாம். இறைவரின் திருப்பெயர் - வலம்புரிநாதர். இறைவியின் திருப்பெயர் - வடுவகிர்க்கண்ணியம்மை. திருமால் வழிபட்டுச் சங்குபெற்ற தலம். இதற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்றும், அப்பர் பதிகம் இரண்டும் சுந்தரர் பதிகம் ஒன்றும் ஆக நான்கு பதிகங்கள் இருக்கின்றன.
|