கல்வெட்டு : இத்திருக்கோயிலில் விக்கிரம சோழன், இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாங் குலோத்துங்கன் இவர்களின் காலங்களில் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில், இறைவரின் திருப்பெயர் திருவலம்புரி உடையார் என்றும், இறைவியாரின் திருப்பெயர் தடங்கண்நாச்சியார் என்றும் குறிக்கப்பெற்றுள்ளன. இவ்வூர், விக்கிரமசோழன் கல்வெட்டில் இராசராச வளநாட்டு ஆக்கூர்நாட்டு தலைச்சங்காட்டுத் திருவலம்புரம் என்றும், மூன்றாங் குலோத்துங்கன் கல்வெட்டில் சயங்கொண்ட சோழவளநாட்டு, ஆக்கூர்நாட்டு, தலைச்சங்காட்டுத் திருவலம்புரம் என்றும் கூறப்பெற்றுள்ளது. இக்கோயிலின் கூத்தாடுந்தேவர், அவரது நாச்சியார், பள்ளியறைப் பிராட்டியார், இவர்களை எழுந்தருளுவித்து அவர்களுடைய நாள்வழிபாட்டிற்கு இரண்டேகால்வேலி நிலத்தை அளித்தவன் குலோத்துங்கசோழ வளநாட்டு, விளநாட்டு, ஆலங்குடியிலிருந்த வேளான் கண்டராதித்தன் ஆவன். இது நிகழ்ந்தது விக்கரமசோழனின் ஆறாம் ஆண்டில் ஆகும். இவ்வூர்ச் சபையாராகிய சபையார் மும்முடிசோழன் பேரம்பலத்தில் கூட்டங்கூடி, கோயிலுக்கு வேண்டியவைகளைச் செய்துவந்தனர். இரண்டாம் இராஜாதிராஜன் காலத்தில் சயங்கொண்ட சோழமண்டலத்து மேன்மலைப் பழையனூரார் ஒருவர் இக்கோயிலில் சில படிமங்களை எழுந்தருளுவித்துள்ளார். கோயில்களுக்கு ஆட்களை விற்கும் வழக்கம் இவ்வூர்க் கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளது. அம்முறைப்படி இராஜாதிராஜ வளநாட்டு, நாங்கூராகிய ஸ்ரீபாதுளி சதுர்வேதிமங்கலத்துத் தட்டானாகிய சோமன் ஆறு மனிதர்களைப் பதின்மூன்று காசுக்கு விற்றுக் கொடுத்துள்ளான். இங்ஙனமே தலைச்சங்காட்டுத் திருவலம்புரி உடையான் கலியன் குமாரனாகிய தம்பிரான் தோழன் எட்டு ஆட்களை விற்றுக்கொடுத்த செய்திகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 75. திருவலிவலம் சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். திருவாரூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது கரிக்குருவி சூரியனும், காரணரிஷியும் பூசித்துப்
|