தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை இவர்களின் திருமேனிகளை எழுந்தருளுவித்த செய்தியைத் தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டில் அரசர் பெயர் இல்லாமையால் அவைகள் எப்பொழுது எழுந்தருளுவிக்கப்பட்டுள்ளன எனக் கூறுவதற்கு இல்லை. சகம் 1313 அதாவது கி. பி. 1391 இல் இவ்வூரில் பஞ்சம் உண்டாயிற்று. இது நிகழ்ந்தது வீர அரியண்ண உடையார் மகன், விருப்பண்ண உடையார் காலத்தில் ஆகும். இவர் காலத்திலே சகம் 1303 இல் குளம் உடைப்பெடுத்து கோயில் நிலங்கள் தரிசாய்க் கிடந்தன. ஆதலின் கோயிலார் கோயில் நிலங்களில் சிலவற்றை விற்று அவ்வுடைப்பை அடைத்தருளினார்கள். திருக்கண்ணப்ப நாயனார் பரம்பரையைச் சேர்ந்த வேடுவர்களில் சிலர். சம்புவராயருடைய மேன்மை கருதி இக் கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளனர். சகம் 1460 இல் ஏற்பட்ட அச்சுதைய தேவ மகாராயர் கல்வெட்டில் இறைவரின் திருப்பெயர் திருப்பனங்காவுடைய நாயனார் அன்புடைய நாயனார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. 77. திருவாஞ்சியம் இலக்குமியை வாஞ்சித்து (விரும்பி)த் திருமால் பூசித்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. மயிலாடுதுறை - பேரளம் தொடர்வண்டிப் பாதையில், நன்னிலத் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே 9 கி. மீ. தூரத்தில் இருக்கிறது. காவிரித்தென்கரைத் தலங்களுள் 70-ஆவது ஆகும். நன்னிலத்திலிருந்து பேருந்துகளில் செல்லலாம். இறைவர் : வாஞ்சியநாதர். இறைவி : வாழவந்தநாயகி. தீர்த்தம் குப்த கங்கை. இது கோயிலுக்கு வடபால் இருக்கிறது. கார்த்திகை ஞாயிறு நாள்களில் மக்கள் விசேடமாக நீராடுகின்றனர். தலவிருட்சம் : சந்தனமரம். இது பிராகாரத்தில் இருக்கின்றது. இயமன் பூசித்துப் பேறுபெற்றான். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு இயமவாதனை இல்லை. இயமனுக்குத் தனிக் கோயிலும் இருக்கின்றது. இது முத்தியளிக்கும் தலங்களுள் ஒன்றாகும். இது
|