பக்கம் எண் :

37
 

சிறப்புப் பெயர். இது தலைவனையும் குறிக்கும். திருமுதுகுன்றத்தில் பெருமானையே நம்பி என்று பலகால் போற்றிப் பொன் வேண்டும் குறிப்பினராய் "மெய்யை முற்றப் பொடி பூசியோர் நம்பி" (தி. 7 ப. 633) என்று தொடங்கும் பதிகம் பாடுகிறார். இப்பதிகத்துள் எழுபதுக்கு மேற்பட நம்பி என்ற சொல்லை அமைத்துள்ளார். இறுதிப்பாடல் முழுமையாய் இல்லை. அதில் இறைத் தத்துவத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மனம் கசிந்து உருகாதார்க்குப் பெருமான் வெளிப்படமாட்டான். கரந்து உறைவான். கசிந்த மனம் உடையவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அம்மையிலுமாக மும்மைக்காலத்தும் இன்பம் பெருக்கும் நம்பியாகத் திருவருள் பாலிப்பான் என்கிறார். அப்பாடல் அடி காண்க.

"கரக்கும் நம்பி, கசியாதவர் தம்மை, கசிந்தவர்க்கு இம்மையோடு அம்மையில் இன்பம் பெருக்கும் நம்பி பெருகக் கருத்தா" (தி. 7 ப. 63 பா. 10) என்பது கிடைத்துள்ள பாடற்பகுதி.

ஏழெழு நூறிரும் பனுவல்:

திருச்செம்பொன்பள்ளி தொழுது திருநின்றியூர் சார்கின்றார் சுந்தரர். கோச்செங்கணான், அகத்தியர், இந்திரன் முதலியோர் வழிபட அவர்கட்கு அருள்செய்தமை கண்டு அடியேனும் அவ்வருளைப் பெற உன் இணையடிகள் அடைந்தேன் (தி. 7 ப. 65) என்று குறிப்பிடுகிறார். இவற்றுள் இரண்டு வரலாறுகள் குறிப்பிடத்தக்கன. "இணைகொள் ஏழெழு நூறிரும் பனுவல் ஈன்றவன் திருநாவினுக்கரையன்" என்பது ஒன்று. திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் நாலாயிரத்துத் தொளாயிரம் என்பதை ஏழெழு நூறு இரும்பனுவல் என்பதால் குறிப்பிட்டு உள்ளார். 4,900 என்பது பாடல்களா? பதிகமா? என்பது ஆய்வுக்குரியதாகவே கொள்கின்றனர். இங்குச் சுந்தரர் ஏழெழு நூறிரும் பனுவல் என்று பாடல்களையே குறிப்பிட்டுள்ளமையால் அவை பாடல்களே என்பது உறுதியாகிறது. பதிகம் என்ற ஐயப்பாடு எப்படி வந்தது எனில்! நம்பியாண்டார் நம்பிகள் திருநாவுக்கரசர் திருஏகாதசமாலையில் "பதிகம் ஏழெழு நூறு" என்று குறிப்பிட்டிருப்பதால் வந்தது. முன்பு சொன்னவர் சுந்தரர், பின்பு சொன்னவர் நம்பிகள். இவர் பதிகம் என்பதற்குப் பாடல் என்றே பொருள் கொண்டார் என்று கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. சிந்திக்கவும்.

முந்நூற்று அறுபது வேலி:

வருடத்திற்கு 365 நாள்கள். அதைத் தொகுப்பாக 360 என்றே