கொண்டு 360 நாளைக்கும், நாள் ஒன்றுக்கு ஒருவேலி நில வருவாயைக் கோயில் வழிபாட்டிற்குக் கொடுத்த கொடையாளர் பரசுராமர். அவருக்குத் திருவருள் சுரந்த தன்மையை ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார். அந்தக் காலப் பெரியார்களின் மனவளத்தைக் காட்டுகிறது இப்பாடல். அதனைக் காண்போம். மொய்த்த சீர் முந்நூற்றறுபது வேலி | மூன்றுநூறு வேதியரொடு நுனக்கு | ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏந்தி | ஓங்கு நின்றியூர் என்று உனக்களிப்ப, | பத்தி செய்த அப்பரசுராமற்குப் | பாதம் காட்டிய நீதி கண்டடைந்தேன் | சித்தர் வானவர் தானவர் வணங்கும் | செல்வத் தென் திருநின்றியூரானே. | (தி. 7 ப. 65 பா. 3) |
இத்திருக்கோயில் நமது ஆதீன அருளாட்சியில் உள்ளது. குறிப்பிட்டுள்ள நிலம் ஏதும் கோயிலுக்கு இல்லை. இக்கோயில் இப்போது வைத்தீஸ்வரன் கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஓங்காரத்து உருவாகி நின்றான்: திருநாட்டியத்தான்குடி தொழுது, திருவலிவலம் வந்த சுந்தரர் "ஊன் அங்கத்து உயிர்ப்பாய் இருப்பவனும் ஓங்காரத்து உருவாகி இருப்பவனுமாகிய வள்ளலை வலிவலம் தன்னில் வந்து கண்டேனே" (தி. 7 ப. 67) என்று பத்துப் பாடல்களிலும் குறிப்பிடுகிறார். இப்பதிகம் மூன்றாம் பாடலில் "ஆழியனாய் அகன்றே உயர்ந்தானை" என்று குறிப்பிடுகிறார். இது திருவாசகத்தில் "ஐயா என ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே," (தி. 8 சிவபுர. அடி 35) என்ற தொடரோடு ஒத்துள்ளமை கண்டு மகிழலாம். சுந்தரர் மூன்று நிலைதான் குறிப்பிட்டுள்ளார். மணிவாசகர் அத்துடன் "நுண்ணியன்" என்ற ஒன்றைச் சேர்த்து நான்காகக் குறித்துள்ளார். இவ்ஒப்பீடு நமக்கு நலம் தருவதாய் உள்ளது. நள்ளாறனை அமுதை: திருவாரூரிலிருந்து பல தலங்களையும் வணங்கித் திருநள்ளாறு சேர்ந்த சுந்தரர் நள்ளாறனை அமுதமாகவே அநுபவிக்கிறார். ஒவ்வொரு பாடல் இறுதியிலும் "நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என்னினைக்கேனே" என்று பாடுகிறார். சமயாசாரியர் நால்வருமே பெருமானை அமுது என்று பல இடங்களிலும்
|