குறிப்பிடுதல் காணலாம். "செம்பொன்மேனி" எனத்தொடங்கும் இத்தலப் பதிகத்தின் (தி. 7 ப. 68) ஆறாம் பாடலில் தன்னை அற்புதப் பழ ஆவணம் காட்டி ஆட்கொண்ட திறத்தை அறிவித்திருப்பது சிறந்த அகச்சான்று. அப்பாடல் காண்போம். கற்பகத்தினைக் கனகமால்வரையைக் | காமகோபனைக் கண்ணுதலானைச் | சொற்பதப் பொருள் இருள் அறுத்தருளும் | தூய சோதியை வெண்ணெய்நல்லூரில் | அற்புதப் பழ ஆவணம் காட்டி அடியனாய் | என்னை ஆளது கொண்ட | நற்பதத்தை நள்ளாறனை அமுதை | நாயினேன் மறந்து என் நினைக்கேனே. | (தி. 7 ப. 68 பா. 6) |
அடும்பிணி இடர்கெடுத்தானை: சுந்தரருக்குக் கண்மறைந்ததோடு சபதம் தவறியமையால் உடம்பில் பெரும்பிணியும் பற்றியது. திருநெல்வாயிலரத்துறையைக் கடந்த பிறகு இப்பிணி அதிகமாகியுள்ளது எனத் தெரிகிறது. திருவாவடுதுறையில் "யார் எனக்கு உறவு" என்றும், "ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டோ" (தி. 7 ப. 70 பா. 6) என்றும், "கண்ணிலேன் உடம்பில் அடுநோயால் கருத்தழிந்து உனக்கே பொறையானேன்" (தி. 7 ப. 70 பா. 2) என்றும் பாடுவதால் இது புலனாகிறது. அப்பெருநோய் நீங்க, "திருத்துருத்தி என்னும் குத்தாலத்தில் திருக்கோயிலுக்குள் உள்ள வடகுளம் என்ற தீர்த்தத்தில் குளிக்க" எனப் பெருமான் அசரீரி தோன்றியது. குளித்தெழுந்தார். நோய் முற்றிலும் நீங்கியது. சொன்னவாறு அறியும் பெருமானாகிய உக்தவேதீஸ்வரரை "மின்னுமா மேகங்கள்" எனத் தொடங்கும் பதிகத்தால் (தி. 7 ப. 75) துதித்துப் போற்றினார். "என் உடம்பு அடும்பிணி இடர்கெடுத்தானை" நான் மறக்குமாறு எங்ஙனம் என்னும் பொருளில் பாடினார். அப்பாடல்பகுதி காண்க. "என்னைநான் மறக்குமாறு எம் பெருமானை, என் உடம்பு அடும்பிணி இடர்கெடுத்தானை" (தி. 7 ப. 74 பா. 1) மேலும், தொடர்ந்திடும் கடும்பிணித் தொடர்வறுத்தானை, (தி. 7 ப. 74 பா. 3) உற்றநோய் இற்றையே உறஒழித்தானை, (தி. 7 ப. 74 பா. 5) இழிந்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை, (தி. 7 ப. 74 பா. 9) "அம்மை நோய் இம்மையே ஆசறுத்தானை". (தி. 7 ப. 74 பா. 8) "மேலைநோய் இம்மையே விடுவித்தானை" (தி. 7 ப. 74 பா. 9)
|