பக்கம் எண் :

40
 

என்பன அப்பதிகப்பாடல்களில் காணப்படுவன. மேலும் அவ்வடகுளத் தீர்த்தத்தில் இன்றும் மென்மையான பசுமையான பாசி படர்ந்துள்ளது. பாசி படர்ந்திருந்தும் நீர் தெளிவாக உள்ளது. இப்பாசி எதனாலும் நீங்கிற்றிலலது. இதுவே இன்றும் நோய்க்கு மருந்தாயுளது.

ஆரம் கொண்ட எம்மான்:

சுந்தரர் திருமழபாடி மாணிக்கத்தை வழிபட்டுத் திருவானைக்கா ஈசனைத் தொழுதார். அங்கு இறைவனை வழிபடும் அடியவர்கள் எம்மையும் அடிமையாகக் கொண்டவர்கள், என்னும் கருத்தை ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பாடியுள்ளார். "மறைகளாயின நான்கும்" எனத்தொடங்கும் அப்பதிகத்துள் (தி. 7 ப. 75) ஏழாம் பாடலில் உறையூர்ச் சோழனுக்கு அருள்செய்த பாங்கினைக் குறித்துள்ளார். சோழன் காவிரியில் நீராடும்போது அவன் அணிந்திருந்த முத்தாரம் கழன்று காவிரியில் கலந்தது. அதைத் தேடாமல் அது பெருமானுக்கே ஆகட்டும் என்றால் அது பெருமானுக்கு நீராட்டுதற்கு எடுத்துச் சென்ற திருமஞ்சனக் குடத்துள் அம்முத்தாரம் புகுந்து நீராட்டும்போது பெருமான் முடிக்கு அணி செய்தது. அப்பாடல் காண்க.

தார மாகிய பொன்னித் தண்துறை ஆடி விழுத்தும்
நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்என ஆங்கே
ஆரம் கொண்டஎம் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடை யாரே.

(தி. 7 ப. 75 பா. 7)

ஊழ்வினை நலிய ஒட்டாரே:

முன்பு செய்த வினை பழவினை, ஊழ்வினை என்று பேசப்பெறும். இவ் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டியேவிடும் என்பதே சாத்திரம். இதற்காக எழுந்ததே சிலப்பதிகாரம். எனினும் பெருமானை மனம் உருகி வழிபடுவாரை ஊழ்வினை, பழவினை வல்வினை நலியாது என்பதை அறுதியிட்டுக் கூறுகின்றன திருமுறைகள். இதன் கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். முன் செய்த வினையை, அதற்குரிய பலனை அநுபவித்தே ஆகவேண்டும். ஆனால் "மடைமாற்றம் செய்வது" என்பது போல அந்த வினைப்பயனை வேறு வழியில் அநுபவித்துக் கழித்துக் கொள்ளலாம்.

ஒருவன் பெற்ற கடனைக் கொடுத்தேயாகவேண்டும். அவனிடமோ பொருள் இல்லை. அவன் வேலை செய்து மாதாமாதம் உழைக்கும் உழைப்பாலேயே கடனை அடைப்பதுபோலச் சாதாரணமான உலக உழைப்பேயன்றிப் பெருமானை மனமுருகி