‘‘தோற்றம் துடியதனில்; தோயும் திதிஅமைப்பில்; சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்-ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோதம்; முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு’’ எனவும், ‘‘மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு, மலம் சாய அமுக்கி,அருள் தானெடுத்து-நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல் தான்எந்தை யார்பரதந் தான்’’ எனவும் போந்த உண்மை விளக்க வெண்பாக்களால் முறையே உணர்க. விளம்புதல்-துதித்தல், ‘‘விளம்புமா விளம்பு’‘ என்பதற்கு, ‘யான் விளம்புதற்பொருட்டு, நீ விளம்புவாயாக’ எனவும், இதனுள் இனி வரும் திருப்பாட்டுக்களிலும், ‘‘பணியுமா பணியே, கருதுமா கருதே’’ முதலியவற்றிற்கும் இவ்வாறேயாகவும் உரைக்க. இவற்றால், இறைவனது காணும் உபகாரத்தின் இன்றியமையாமை விளக்கப்படுகின்றது. ‘காட்டும் உபகாரம், காணும் உபகாரம்’ என்பவை பற்றி இங்குச் சிறிது கூறற்பாற்று. ‘‘அறிவிக்க அன்றி அறியா உளங்கள்’’ (சிவஞானபோதம் சூ.8.அதி.2) என்றபடி, உயிர்களின் அறிவு, அறிவிக்கும் பொருளின்றி ஒன்றை அறியும் தன்மையைப்பெறாது. ஆகவே, உயிரினது அறிவு, பிறிதோர் ஒளியின்றித் தானே உருவத்தைக் காணமாட்டாத கண்ணின் ஒளிபோன்றதாம். அதனால், கதிரவன் ஒளி கண்ணொளியிற் கலந்து உருவத்தைக் காணச் செய்யும் முறைபோல, இறைவன் உயிரறிவிற் கலந்து பொருள்களை அறியச் செய்வான். இவ்வாறு செய்வதே, ‘காட்டும் உபகாரம்’ எனப்படும். இனிக் கதிரவன் ஒளி கலந்தமையால் விளக்கம் பெற்ற பின்னும் கண்ணொளி தானே சென்று உருவத்தைக் காணமாட்டாது: அதனோடு ஆன்மாவினது அறிவும் உடன்சென்று அறிந்தால்தான், கண் உருவத்தைக் காணும்; அதுபோல, |