பக்கம் எண் :

4திருவிசைப்பா[ஒன்பதாந்


2.

இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்
   இருட்பிழம் பறஎறிந் தெழுந்த
சுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்குந்
   தூயநற் சோதியுட் சோதீ !
அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா !
   அயனொடு மால்அறி யாமைப்
படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்
   தொண்டனேன் பணியுமா பணியே.              (2)
 

இறைவனது  கலப்பால் விளக்கம்  பெற்ற பின்பும்   உயிரினது அறிவு,
தானே  சென்று  ஒன்றை  அறியமாட்டாது;  அதனோடு   இறைவனும்
உடன்சென்று  அறிந்தால்தான்  உயிர்  பொருளை  அறியும். ஆகவே,
உயிர்கள்  அங்ஙனம்  அறிதற்பொருட்டு  அவற்றோடு  தானும் உடன்
நின்று   அறிதலே.   ‘காணும்   உபகாரம்’   எனப்படும்.   இவற்றின்
இயல்பெல்லாம்,  சிவஞானபோதம்  முதலிய  சித்தாந்த  நூல்களாலும்,
உரைகளாலும் இனிது உணரற்பாலன.

2.‘‘இருட்     பிழம்பு’’ என்றது, அறியாமையைச் செய்யும் ஆணவ
மலத்தை.   ‘‘சுடர்மணி   விளக்கு’’   என்றது,   அம்மலத்தின் நீங்கி
விளங்கும்   ஆன்ம  அறிவினை,  ‘‘தூயநற்   சோதி’  எனப்பட்டதும்
அதுவே.  ‘ஒளியாய்’  என  ஆக்கம்  வருவிக்க.   ‘‘சோதியுட் சோதி’’
என்றது.  வாளா  பெயராய் நின்றது. எனவே, ‘‘சுடர்மணி  விளக்கினுள்
ஒளி  விளங்கும்’’  என்றது.  இப்பெயர்ப்  பொருளை  விரித்தவாறாம்.
‘‘பரஞ்சுடர்ச்-சோதியுட்  சோதி யாய்நின்ற  சோதியே’’ (திருமுறை-5.97.
3.)   என்றும்.  சோதி  யாய்எழும்  ‘‘சோதியுட்  சோதிய’’  (பெ.  பு.
தடுத்-193.)  என்றும்  வருவனவற்றால்,  இறைவன், ‘சோதியுட்  சோதி’
எனப்படுதல்   அறிக.   ‘எறிந்து  விளங்கும்  சோதி’   என முடிக்க’
அடல்-வலிமை,     பாகன்-நடத்துபவன்.   அறியாமை - அறியாதபடி.
‘அறியாமை நின்றாயை’ என இயையும்.