உள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் ‘ராஜராஜு ஸ்வரம்’ என்றே இக்கோயிலைக் குறிப்பிடுகின்றன. இலக்கண விதிப்படி அது தவறுடையதாகும். ராஜராஜேஸ்வரம் என்பதே திருத்தமுடையது. இராசராசேச்சரம் நிலைபெற்றுள்ள இடம்: “பாண்டிகுலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜு ஸ்வரமுடையார்க்கு நாம் குடுத்தனவும், நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீ விமானத்திலே கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிஞ்சருள வெட்டின’’ _ என்னும் முதலாம் இராசராச சோழனின் ஆண்டு 26, நாள் இருபதில் வெட்டப்பட்ட கல்வெட்டுப்பகுதி, தஞ்சை இராசராசேச்சரம் நிலைபெற்றுள்ள இடம் பாண்டிகுலா சனிவளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரில் அமைந்துள்ளதைப் புலப்படுத்தும். பாண்டிகுலாசனி என்பது முதலாம் இராசராச சோழனுடைய விருதுப் பெயர்களில் ஒன்று. இதற்குப் பாண்டியர் குலத்துக்கு இடியை ஒத்தவன் என்பது பொருள். இப்பெயரே இவ்வளநாட்டுக்கு வைக்கப்பெற்றதாகும். இப்பெயர் பிற்காலத்தில் பாண்டிகுலபதி வளநாடு என்று வழங்கப்பெற்றுள்ளது. இப்பாண்டிகுலாசனி வளநாடு _ ஆர்க்காட்டுக் கூற்றம், இடையாற்றுநாடு, எயிநாடு, எறையூர்நாடு, கிளியூர்நாடு, கீழ்செங்கிளிநாடு, சுத்தமல்லி வளநாடு, தஞ்சாவூர்க் கூற்றம் பனங்காடுநாடு, புறக்கிளிநாடு, மீசெங்கிளிநாடு, மீய்வாரிநாடு, வடகவிரைநாடு, வடசிறுவாயில்நாடு, விளாநாடு முதலான பதினேழு பிரிவுகளாகப் பிரிக்கப்பெற்றிருந்தது. தஞ்சாவூர்க் கூற்றம்: தஞ்சாவூர், கருந்திட்டைக்குடி முதலான ஊர்கள் இக்கூற்றத்தில் அடங்கியிருந்த ஊர்களிற் சிலவென்று கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. கூற்றம் என்பது இருநாடுகளுக்கு இடைப்பட்ட சிறு பிரிவாகும். இக்காலம் ஒரு தாலூகாவிற்குச் சமம் ஆகும். |