பழனம்’ என்க. பழனம் - மருத நிலம். ‘சிரம் புரைமுடி -தலையின்கண் உயர்ந்த முடியை அணிந்த. முறையால்-தமக்கேற்ற வரிசையில். ‘மாந்து மேதிகள் சேர்’ ‘பரம்பிரி’ ‘கழனி செங்கழுநீர்’, ‘சிரம்புணர்முடி’ என்பனவும் பாடங்கள். 15. ‘தெருவில்’ என்பதனை முதலிற் கொள்க. ஓத்து-வேதம். ‘கடல் ஒலிபோல’ என உவம உருபு விரிக்க. ‘பெரும் பற்றப் புலியூரின்கண் திகழும்’ என்க. ‘சீர்’ என்பது தாள அறுதி. இலயம்- தாளம். ‘‘இயல்பின்’‘ என்றதில் இன்,சாரியை. ‘இயல்பினோடு’ என மூன்றாவது விரிக்க. மா-சிறந்த, மணிக் குறங்கு-அழகிய துடை. 16. ‘நிறைந்த, தழைத்த வாழை’ என்க. ‘வாழை, தெங்கு, கமுகு, பலா, மா என்பவற்றின்மேல் பிறை தவழ் பொழில்’ என்றவாறு. இவற்றோடு இயைபில்லாத துகிற் கொடியை இடை வைத்தார்; பிறை தவழப்பெறுதலாகிய ஒப்புமை பற்றி. எனவே, அதனை முதலிற் கூட்டி, ‘நிழற்கொடியோடு ’ என வேறுவைத்துரைக்க. ‘பலா’ என்பது ஈறு குறுகிநின்றது: செய்யுளாதலின் உகரம்பெறாது வந்தது. |