பொருள்மேற் பல பெயர். சாந்தையூர் என்றதில், ‘‘ஊர்’’ என்றது. அதன்கண் வாழ்வாரை. தருண இந்து சேகரன் - இளமையான சந்திரனை அணிந்த முடியை உடையவன். 61. பொருள் - மெய்ப்பொருள். நேர்ந்த - தெளிந்த, அருள் நேர்ந்து - அருளைத் தர இசைந்து தெருள் நேர்ந்த சித்தம்- இவளது துன்பத்தைத் தெளிய உணர்ந்த மனம். ‘மனம்’ என்பதை, ‘உனது மனம்’ என உரைக்க. வலியவா - கடிதாய் இருந்தாவாறு. இதனை இறுதியில் வைத்து, ‘வருந்தத்தக்கது’ என்னும் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. இதனுள், ‘தருணேந்து சேகரனே’ என்பது ஒன்றும் தலைவி கூற்று. ஏனைய, செவிலி கூற்று. 62. ‘குலம்’ என்பது ககரம் பெற்று, “குலகம்” என வந்தது; ‘கூட்டம்’ என்பது பொருள். அம்மையை வேறு கூறியது, 'அவளோடு உடனாய் நின்று காட்சி வழங்கும் அவன்’ என்பது உணர்த்துதற்கு. கொடுத்து - கொடுத்தமையால், “வெண்ணீறு” என்றதற்கு, ‘அதனைப் பூசுதலும்’ எனவும், “அஞ்செழுத்து” என்றதற்கு. ‘அதனைச் சொல்லுதலும்’ எனவும் உரைக்க. “வேந்தன்” என்றது, சிவபிரானை. |