வள்ளியது தன்மையைக் காட்டிலும், மறத்தொழில் வார்த்தையும் உடையன் - பகைத்தொழிலையுடைய சொற்களையும் இவள் ( தலைவி) கூற்றில் உடையனாகின்றான். தன் கணவனை மற்றொருத்தி காதலித்தலை அறியின் அவளிடத்தில் வள்ளியம்மைக்குப் பகையுண்டாதல் இயல்பாதலின், ‘அவளினும் பகை வார்த்தையை உடையன்’ என்றாள். ‘மாலை கொடாமையேயன்றி’ என்னும் பொருள் தருதலின், ‘‘வார்த்தையும்’’ என்ற உம்மை இறந்து தழுவிய எச்சம். மடங்கல் - சிங்கம். ‘‘அமுதத்தினை’‘ என்றதன் பின்னர், ‘கண்டு’ என ஒருசொல் வருவிக்க 78. ‘‘எவர்க்கும் மெய்யன்பர்’’ என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. ‘மருள’ என்பது, ‘‘மருண்டு’’ எனத் திரிந்தது. மல்கு - வளங்கள் நிறைந்த. ‘கோயிலையும், குன்றத்தையும் உடைய, சோலைகள் வளர்கின்ற திருப்பிடவூர்’ என்க. இஃது ஒரு வைப்புத் தலம். திருக்கைலையில் அரங்கேறிய சேரமான் பெருமாளது ஞானவுலாவை மாசாத்தனார் வெளிப்படுத்திய ஊர். ஒருதலப் பதிகத்தில் மற்றொரு தலத்தை நினைவுகூரும் முறைபற்றி இத்தலத்தை இங்கு எடுத்தோதினார். ‘திருப்பிடவூரில் அருள்செயாவிடுமே’ என்க. அருள் செயாவிடுமே - அருள்செய்யா தொழிவானோ. விடலை - காளை. இதனை, கொழுந்து’’ என்பதன் பின்னர்க் கூட்டுக. குருண்ட - சுருண்ட. கோமளக் கொழுந்து - அழகின் குருத்து ; என்றது முருகனை. இதனுள், முருகனுக்கு, பிறைச்சடை முடியும், முக்கண்ணும் கூறப்பட்டமை நோக்கற்பாலது. இனி, ‘‘கோமளம்’’ என்றதனைச் சிவபிரானுக்கு ஆக்கியுரைப்பினும் ஆம். |