159. செங்கணா-திருமாலே. போற்றி-வணக்கம். திசைமுகா-பிரமதேவனே சிவபுர நகருள் வீற்றிருந்த அங்கணா-சிவனே. அமரனே-தேவகூட்டத்தினனே, அமரர்கள் தலைவனே-இந்திரனே. சிவபெருமான் ஒருவனே இவர் யாவருமாய் நின்று அருள்செய்தல் பற்றி இவ்வாறு கூறினார். ‘‘தங்கள் நான்மறை நூல்’ என்றதனால், திருச்சாட்டியக்குடியில் உள்ளோர் அந்தணர் என்பது பெறப்படும். 160. சித்தன்-எல்லாம் வல்லவன். செங்கணன்-நெருப்புக் கண்ணையுடையவன். அமரன்-தெய்வ வடிவினன். அமரர்கள் அதிபன்-தேவர்கள் தலைவன். படுகர்-குளம். தண்டலை-சோலை. ‘படுகரையும் தண்டலையையும் உடைய சூழலையுடைய சாட்டியக்குடி என்க. ‘‘முன்னவா’’ என்றதனை முதலிலும் ‘‘துயர்கெடுத்து எனக்கு’’ என்றதனை, ‘‘சித்தனே’’ என்றதன் பின்னும் கூட்டுக. இங்ஙனம் கூட்டவே, இஃது ஏனைப் பெயர்களின் பின்னும் வந்து இயைதல் அறிக. ‘‘துயர்கெடுத்து எனக்கு அருளாய்’’ எனப் பலமுறையும் கூறியது, முறையீடு தோன்ற. |