னும்’’ என்றதன்பின் ‘வந்தார்’ என்னும் பயனிலை எஞ்சி நின்றது. ‘அரசன் வந்தான்’ என்றவழி, அமைச்சர் முதலாயினார் வந்தமை தானே பெறப்படுதல்போல. ‘நாராயணன் முதலியோர் வந்தார்’ எனவே, ஏனைத் தேவர் பலரும் வந்தமை சொல்லாமே அமைந்தது. பெரியோனது தனிப்பெருவிழாவாகலின், அமரர் அனைவரும் எஞ்சாது வருவாராயினர். ‘‘தேரார் வீதியில்’’ என்பதன்முன், ‘இவ்வாறு’ என்னும் இயைபுபடுத்தும் சொல் வருவிக்க. ‘‘தேரார் வீதி’’ என்றதனால், ஆதிரைநாளில் வீதியில் தேரோடிய குறிப்பு அறியப்படும். ‘‘நிறைந்து’’ என்றதனை, ‘நிறைய’ எனத் திரிக்க. நிறைய-நிறைந்து நிற்க. பார் ஆர்-நிலவுலகெங்கும் நிறைந்த. தொல் புகழ்-பழைமையான புகழ்; இது சிவபிரானுடையது. ஆடியும்-அப்பாடலுக்கு ஏற்ப ஆடுதலைச் செய்தும். ‘‘ஆதிரைநாள்’’ என்றமையின், அந்நாளை யுடையானுக்குப் பல்லாண்டு கூறுதும்’ என்க. 301. ‘எம் தந்தை, எம் தாய், (எம்) சுற்றம், (மற்றும்) எல்லாப் பொருளும் எமக்குச் சிவபிரானே என்றென்று சிந்தை செய்யும் சீரடியார்’ என உரைக்க. அமுதாம் எம்பிரான்-அமுதம்போல இனிக்கின்ற எங்கள் பெருமான்; ‘சிவபிரான் என்றபடி. முதலடியின் இறுதிச்சீரின் ஈற்றசை நேர்பு.நேர்பசை நிரைபசை கொள்ளாதார் இச் சீரினை, ‘நாலசைச் சீர்’ என்ப. ‘என்றுமே’ என ஓதி, எழுசீராகவும் ஆக்குப. |