தெங்கூர் நகரத்தார் இருநூற்றுத் தொண்ணூற்று ஏழு கழஞ்சே நாலு மஞ்சாடியும் மூன்றுமா முக்காணி பொன்னையும், திருவாலி நாட்டுக் குறுவாணியக்குடி ஊரார் முந்நூற்று நாற்கழஞ்சே மூன்று மஞ்சாடியும் ஒன்பதுமாவரை பொன்னையும், காணிக்கடனாகக் கொடுத்தனர். ஏனைய ஊரார்கள், மேற்குறித்த சற்றேறக்குறைய ஒன்றரைலட்சம் கல நெல்லை இராசகேசரியோடு ஒக்கும் ஆடவல்லான் என்னும் மரக்காலால் அளந்து வந்தனர். மேற்குறித்த ஊர்களில் ஒவ்வொரு ஊரிலுள்ள மொத்த நிலம், அவைகளில் இன்ன காரணத்திற்காக இறையிலியாக நீக்கப்பட்ட நிலம் இவ்வளவு, எஞ்சிய நிலம் இவ்வளவு, இந்த எஞ்சிய நிலத்துக்குக் கட்டவேண்டிய காணிக்கைக் கடன் இவ்வளவு என இந்த நிவந்தத்தை உணர்த்தும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்ட செய்திகள் நம்மை மகிழ்ச்சிக் கடலில் செலுத்துவனவாகும். உதாரணமாக, “இன்னாட்டு ஆரப்பாழ் நாய்வாலமும், மருத்துவப்பேறும், பள்ளியும் உட்பட அளந்தபடி நிலம் நூற்று ஒருபத்து ஒன்றே, அறுமா அரைக்காணிக் கீழ்முக்காலே அரைக்காலின்கீழ் அரையே இரண்டுமாவிலும், ஊர்நத்தமும், குளங்களும், ஸ்ரீ கோயிலும், ஐயன்கோயிலும், பிடாரிகோயிலும், கழனிக் குளங்களும், பறைச்சேரி நத்தமும், இறையிலி நிலம் மூன்றரையே நான்குமாக்காணி அரைக்காணி நீக்கி, இறை கட்டின நிலம் நூற்று ஏழரையே இரண்டு மாக்காணிக்கீழ் முக்காலே அரைக்காலின் கீழ் அரையே இரண்டுமாவினால் இறைகட்டின காணிக்கடன் ராஜகேசரியோடொக்கும் ஆடவல்லான் என்னும் மரக்காலால், அளக்கக் கடவ நெல்லுப் பதினாயிரத்து எழுநூற்று நாற்பத்து ஐங்கலனே இரு தூணிப் பதக்கு முன்னாழி ’’ என்னும் கல்வெட்டுப் பகுதி முதலியன இவைகளுக்குச் சான்றாகும். இந்த நிலநிவந்தத்தை உணர்த்தும் கல்வெட்டுக்களினால் அறியப்படும் அக்கால வழக்குகள்: ஸ்ரீ கோயில், பிடாரிகோயில், ஐயன்கோயில், சேட்டையார் கோயில், காடுகாள் கோயில், ஊர் இருக்கை, ஊர்நத்தம், கம்மாணச்சேரி, தளிச்சேரி, வண்ணாரச்சேரி, பறைச்சேரி தீண்டாச்சேரி, உழப்பறையர் இருக்கும்சேரி, குளம், குளக்கரை, திருமஞ்சனக்குளம், புலத்தில்குளம் கழனிக்குளம், |