செங்கழுநீர் நட்ட குளம், ஊருணிகுளம், அதன்கரை பறைக்குளக்குழி, கிணறு, அதன் தொட்டி, வெள்ளான் சுடுகாடு, பறைச்சுடுகாடு, சுடுகாட்டுக்குப் போம் வழிகள், நாய்வாலம், மருத்துவப்பேறு, கணிமுற்றூட்டு, சாலாபோகம், பள்ளிச் சந்தம்பள்ளி பெண்பள்ளி, திறப்பான மகாதேவர் தேவதானங்கள், திருவடிகள் தேவதானங்கள், பள்ளிச்சந்தம் இறங்கின ஊர்கள், நந்தவனங்கள், பெருவழிகள், களமாய்க்கிடந்த நிலங்கள், கன்றுமேய் பாழாகக் கிடந்த நிலங்கள், கொட்டகாரம், ஆறுகள், குறங்கறுத்துப் புறவூர்க்கு நீர் பாய்ந்த வாய்க்கால்கள், ஊடறுத்துப்போன வாய்க்கால்கள் இவைகள் முதலானவைகள் இறையிலி நிலங்களாக எண்ணப்பட்டு வந்தன. இவைகளுள் சேட்டையார் கோயில் என்பது மூதேவி (இலக்குமிக்கு மூத்தவள்) எழுந்தருளியிருக்கும் கோயில். காடுகாள் என்பது துர்க்காதேவி, பைரவருடைய தாயார்-கோயில் என்பார் கல்வெட்டுத்துறையாளர். திருநல்லம் (கோனேரிராசபுரம்) உடைய மகாதேவர் கோயிலில் உத்தம சோழன் கல்வெட்டிலும் காடுகாள் கோயிலைப்பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. கம்மாணச்சேரி இது கம்மாளர்கள் வசித்துவந்த இடம். சேரி என்பது சேர்ந்தது என்ற பொருளில் இருக்கிறது. உழப்பறையர் - என்பவர் உழுது பயிர் செய்யும் பறையர். இக்காலம் இவர்கள் ஆதித்திராவிடர் என்று அழைக்கப்பெறுவர். மருத்துவப்பேறு- ஊரில் மருத்துவருக்கு இறையிலியாக விடப்பட்ட நிலம். பள்ளி- என்பது சைன பௌத்தக்கோயில். பள்ளிச்சந்தம்- சைன பௌத்த கோயில்களுக்கு விடப்பட்ட நிலம். கணிமுற்றூட்டு - சோதிடர்க்கு இறையிலியாக விடப்பட்ட நிலம்.(The land enjoyed by the community of Jaina teachers) என்பர் கல்வெட்டுத் துறையினர். அது பொருந்துவது அன்று. சாலாபோகம்- அறச்சாலைக்காக விடப்பட்ட நிலம். பெருவழிகள்- ரஸ்தாக்கள் (Roads). ஊருணி-ஊரார் உண்ணும் நீர் நிலை. குறங்கறுத்துப் புறவூர்க்கு நீர்பாய்ந்த வாய்க்கால்- வாய்க்காலிலிருந்து வேறு தனியாகப் பிரிந்த வாய்க்கால். பெண்பள்ளி- சைனசமயப் பெண்துறவிகள் இருக்குமிடம். நாய்வாலம்- என்பது இன்னதென்று இக்காலம் புலப்படவில்லை. |