திருமஞ்சனம் ஆட்டியபின் திருமேனியில் உள்ள நீரை ஒற்றி எடுக்கும் ஆடையாகும். ஏனையவை வெளிப்படை. பொதுச் செய்திகள்: இத்திருக்கோயிலில் அக்காலம் அர்ச்சகராய் இருந்தவர். சைவாசாரியர் பவனபிடாரர் ஆவர். இக்கோயில்காரியங்களைச் (ஸ்ரீகாரியம்) செய்தவர் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்பவர். இதில் தென்னவன் மூவேந்த வேளான் என்பது இவனது அரசியல் ஊழியங்களைப் பாராட்டி இராசராசனால் கொடுக்கப்பட்ட பட்டப்பெயராகும்.ஸ்ரீகாரியம் கண்காணி நாயகம் செய்தவர் பாண்டி நாடான ராசராச மண்டலத்துத் திருக்கானப்பேர்க் கூற்றத்துப்பாளூர் கிழவன் அரவணையான் மாலரிகேசன் ஆவர். மரக்காலை- ஆடவல்லான் எனவும், நிறைக்கு உரிய கல்லை - தட்சிண மேருவிடங்கன் எனவும், திருவாசல்களைக் கேரளாந்தகன், இராசராசன், அணுக்கன் எனவும், அஃறிணைப் பொருளை உயர்திணையாகவும்; உயர்திணைப் பெண்பாலாகிய அக்காள் என்பதை உயர்திணை ஆண்பாலுக்குரிய விகுதி கொடுத்து அக்கன் எனவும் அக்காலம் வழங்கப்பட்டிருந்தது. இக்கோயில் சாசனத்தில் குறிக்கப்பட்டுள்ள அணிகலன்களினால் அக்காலத்தில் சோழநாட்டில் பொன்னாலும் நவரத்தினங்களினாலும் அணிகலன்கள் செய்யும் தொழில் உயரிய நிலையில் இருந்ததை அறியலாம். கல்வெட்டுத்துறையினர் இராசராசேச்சரக் கர்ப்ப இல்லில் எழுந்தருளியிருக்கும் இறைவன் தட்சிண மேருவிடங்கர் (அ) ஆடவல்லான் என்னும் பெயரால் அழைக்கப்பட்டுள்ளனர் எனக் குறித்துள்ளனர். (The chief image of the central shrine was called Dakshinameru Vidangan or Agavallan. South Indian Inscriptions vol II Part V introduction Page 29) அது பொருந்துவது அன்று. இக்கோயிலின் கர்ப்ப இல்லில் எழுந்தருளியிருக்கும் இறைவர் இராசராசேச்சரமுடையார், இராசராசேச்சரத்துப் பரமசுவாமி என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர். இராசராசேச்சரமுடையாரின் திருமேனி வேறு, ஆடவல்லார் தட்சிணமேரு விடங்கரின் திருமேனி வேறு என்பதனை ‘’ ஸ்ரீகாரியஞ் செய்கின்ற பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்தவேளான்யாண்டு 29வரை உடையார் ராஜராஜீஸ்வரம் உடையார்க்கும், தக்ஷிணமேரு விடங்கர்க்கும், தூபத்தோடு காட்டும் தீபத்துக்கும் கற்பூரத் |