மட்டும் கூறின் அது குன்றக் கூறலாம். இவ்வாறுவரும் இலக்கணமுடிவை வடநூலார் யோகவிபாகம் கூட்டிப்பிரித்தல்) என்பர். அம்முடிபின்படி கனகத் திரளாகிய மேருமலையை வில்லாக ஆண்ட விடங்கன் என்றும், மேரு என்னப்படும் தில்லை அம்பலத்தில் கூத்தாடும் விடங்கன் என்றும் பொருள் கொள்ளப்படும். இக்கோயில் கல்வெட்டில் வரும் தட்சிண மேரு என்பது தில்லைக் கோயிலையே குறிக்கும். எங்ஙனமெனின் வடக்கே ஒரு பொன்மலை உத்தரமேருவாக இருப்பதுபோல தென்பாற் கண்ணும் ஒருமலை ஓங்கி பொன்னொளிகான்று நாற்றிசையும் பரவநிற்றலின் இதுஒரு தட்சிணமேருவே யாகுமென்று ஆன்றோர் கொண்டனர். பொன்னம்பலம் முதற்பராந்தக சோழன் காலத்தில் பொன்வேயப்பட்டு நிலவியமையால் அதனுடைய தோற்றம் கண்டு இதுஒரு தட்சிண மேரு என்று வழங்கியிருத்தல் வேண்டும். வழக்கம் இன்றேல் முதலாம் இராசராசசோழர் தமது கல்வெட்டில் தட்சிணமேரு என்று குறித்திருக்கமாட்டார். அல்லதூஉம் கூத்தன் கவிச்சக்கரவர்த்திகள் இரண்டாங் குலோத்துங்கனால் பொன்வேயப்பெற்ற திருக்கோயிலை முன்னோர் வழங்கிய மரபு போற்றவே தக்கிணமேரு என்று கவியில் அமைத்துள்ளார், தக்கயாகப்பரணியில்: ‘‘நீடிய வெண்டிசை நீழல் வாய்ப்ப நேரிய தெக்கிண மேருவென்னப் பீடிகை தில்லை வனத்தமைத்தபெரிய பெருமாளை வாழ்த்தினவே’’. என்று வருகிறது. அங்கே பீடிகை என்பதற்கு விமானம் என்று பொருள் (தக்கயாகப் பரணி அரும்பதம் முதலியவற்றின் அகராதி, பக்கம் 449.) இதுகாறும் கூறியவற்றால் ஆடவல்லார் என்ற சிறப்பியல்போடு அமைந்த தட்சிணமேருவிடங்கர் சிதம்பரம் நடராஜப் பெருமானையே குறிப்பதாகும். முதலாம் இராசராசசோழன் தான் எடுப்பித்த கோயிலில் தன் குல தெய்வமாகிய தில்லை நடராசப் பெருமானையும் எழுந்தருளுவித்துள்ளான் என்பதே ஆடவல்லார் தட்சிணமேருவிடங்கர் என்னும் தொடரால் அறியப்படும் செய்தியாகும். இக்கோயில் கல்வெட்டுக்களினால் தஞ்சைமாநகரைப் பற்றியும், அதனை ஆண்ட முதலாம் இராசராசனைப்பற்றியும் குறிப்புக்கள் கிடைக்கின்றன. அவைகளைப்பற்றியும் குறிப்பிடுகின்றேன். |