தஞ்சாவூரைப் பற்றிய சிறு குறிப்பு: இத்துணைய வரலாற்றுக் கருவூலங்களைத் தன்னகத்துக் கொண்டு விளங்கும் இராசராசேச்சரம் பாண்டிகுலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரில் உள்ளது என்பதை முன்னர்க் குறித்துள்ளேன். அத்தஞ்சாவூரில் உள்ளாலை (Old limit) புறம்படி (Outside the town) என்னும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றுள் சோழ மன்னரது மாளிகை, புறம்படியில் இருந்தது. அந்த மாளிகையின் ஒரு பகுதிக்கு ராஜாசிரயன் என்னும் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இச்செய்தியை ஹாலண்டு தேசத்து லெய்டன்மாநகரில் உள்ள செப்பேடுகள் (The larger Leiden grants) உணர்த்துகின்றன. (Epigraphica India Vol.XXII No.34 By K.V. Subrahmanya Aiyer B.A.,) மடைப்பள்ளித் தெரு, பன்மையார் தெரு. ஆனைக்கடுவார் தெரு, வில்லிகள் தெரு, காந்தர்வத் தெரு, இராசவித்யாதரப் பெருந்தெரு, வீரசோழப்பெருந்தெரு முதலான தெருக்களைப் புறம்படியிலும்; மும்மடி சோழப்பெருந்தெரு, வீரசிகாமணிப் பெருந்தெரு, சாலியத்தெரு முதலான தெருக்களை உள்ளாலையிலும் கொண்டிருந்தது. வானவன் மாதேவிப்பெருந்தெரு என்பது உள்ளாலை அல்லது புறம்படி இவைகளில் எங்கு இருந்தது என்பதை அறியமுடியவில்லை. அங்காடி என்பது கடைத்தெரு ( Bazaar street) ஆகும். கொங்காள்வார் அங்காடி, இராசராச பிரம மகாராஜா அங்காடி, திரிபுவனமாதேவிப் பேரங்காடி முதலான அங்காடிகளையும் கொண்டு திகழ்ந்தது. இந்தக் கடைத்தெருக்கள் புறம்படியில் இருந்தன. சோழ மன்னர்களால் சிறை பிடிக்கப்பட்ட உயர்குலத்து மகளிர் அடிமையாக வாழும்படி அமைத்த அரணுள்ள இடம் வேளம் ஆகும். (வேளம்-Quarters) அத்தகைய வேளங்கள் அபிமான பூஷணத்தெரிந்த வேளம், உத்தம சீலியார் வேளம், பஞ்சவன் மாதேவியார் வேளம். திருமஞ்சனத்தார் வேளம், அருமொழிதெரிஞ்ச திருப்பரிகலத்தார் வேளம் முதலான பெயர்களைப் பெற்றுத் திகழ்ந்திருந்தன. ‘‘காழகில் கமழும் மாளிகை மகளிர் கங்குல்வாய் அங்குலி கெழும யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே’’ |