சோழ நல்லூரிலும், இராசேந்திர சோழநல்லூரிலும் இருபது வேலி நிலத்தையும்; சுந்தரபாண்டியன், தன்பேரால் நிறுவிய சுந்தரபாண்டியன் சந்திக்கு நிலமும் கொடுத்துள்ளனர். சோழ மன்னர்களில் விசயராசேந்திரன் காலத்தில் அளிக்கப்பெற்ற நிலநிவந்தம் 216 வரிகளில் செதுக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் பல இடங்களில் சிதைந்துவிட்டன. இக் கல்வெட்டுக்களில் இவ்வூர், வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு மண்ணைகொண்ட சோழவளநாட்டு கங்கைகொண்டசோழபுரம் எனக் குறிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளிடப் பேராற்றிலிருந்து வீர நாராயணன் ஏரிக்கு (வீராணத்தேரிக்கு) நீர் போகும் ஆறு, வடவாறு என்று இக்காலம் வழங்கப்பெறினும் அது மதுராந்தக வடவாறு என்று பெயர் பெற்றிருந்தது. மதுராந்தகன் என்பது கங்கைகொண்ட சோழனின் பெயர்களுள் ஒன்று. “உடையார் திருப்புலீஸ்வரமுடையார் திருநாமத்துக் காணி குறுங்குடிக்கும், மன்னனார் திருவிடை யாட்டம் வீர நாராயண நல்லூர் திருவாழிக் கல்லுக்கும்”, என்னும் கல்வெட்டுத் தொடர் சிவபெருமானுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்துக்குத் திருநாமத்துக்காணி என்றும், திருமால் கோயிலுக்கு விடப்பட்ட நிலத்துக்குத் திருவிடையாட்டம் என்றும் வழங்கும் வழக்காறுகளைத் தெரிவிக்கின்றன. மன்னனார் என்பது திருமாலின் பெயர். அவர் எழுந்தருளிய காரணம்பற்றியே ஊர் மன்னார்குடி (காட்டுமன்னார்குடி) என்னும் பெயர்பெற்றது. அவ்வூரின் பழம்பெயர் வீர நாராயணநல்லூர் என்பதாகும். இக்கங்கை கொண்ட சோழபுரத்துக் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்ட குறுங்குடி, கண்ணமங்கலம். வீரராசேந்திர சோழபுரம், மழவதரைய நல்லூர் கிழாய்மேடு, கொல்லாபுரம் முதலான ஊர்கள் இன்றும் அப்பெயர்களுடன் நிலவுகின்றன. களந்தை ஆதித்தேச்சரம் செங்கற்பட்டு ஜில்லா, செங்கற்பட்டு தாலூகாவில் உள்ள பொன்விளைந்த களத்தூரே, களந்தை என்று ஒரு சாராரும், தஞ்சாவூர் ஜில்லா திருத்தருப்பூண்டித் தாலூகாவிலுள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊரே களந்தை என்று வேறு ஒரு சாராரும், கோயமுத்தூர் ஜில்லாபொள்ளாச்சித் தாலூகாவிலுள்ள பெரிய களந்தை என்ற ஊரே களந்தை என்று மற்றொரு சாராரும் கூறிவருகின்றனர். இவைகளின் வன்மை மென்மைகளை ஆராய்வாம். |