பொன்விளைந்த களத்தூர், களந்தை என்று மரூஉ மொழியாக வழங்கப்பெறும். இவ்வழக்கைத் தொண்டைமண்டலசதகத்தால் அறியலாம். ஆனால், இவ்வூரில் உள்ள கோயிலின் பெயர், சயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துக் களத்தூர் பெருந்திருக்கோயில் என அவ்வூர்க் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன1. ஆதலால் இக்களத்தூர் திருவிசைப்பாப்பெற்ற கோயில் களந்தை ஆகாது. தஞ்சாவூர் ஜில்லா திருத்தருப்பூண்டி தாலூகாவில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊரில், அழகிய நாதசுவாமி கோயில், கயிலாசநாதர்கோயில், ஆனைகாத்தபெருமாள்கோயில் என்னும் மூன்று திருக்கோயில்கள் இருக்கின்றன. அவைகளுள் அழகிய நாதசுவாமிகோயிலில் உள்ள பாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவரின் 23 ஆம் ஆண்டு 204 ஆம் நாளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, அவ்வூர் இறைவனை, களப்பாள் உடையார் திரு ஆதித்தேச்சரமுடையார் என்று குறிப்பிடுகிறது. களப்பாள், களந்தை என்று மருவி வருதலும் உண்டு. ஆதலில் இந்தக் களப்பாள் ஆதித்தேச்சரமே கருவூர்த்தேவர் திருவிசைப்பாப்பெற்ற தலமாகும். ‘அந்தணர் அழலோம்பு அலைபுனல் களந்தை’ எனவும், “குழையராய் வந்தென் குடிமுழு தாளுங் குழகரே ஒழுகுநீர்க் கங்கை அழகரே யாகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே ’’ எனவும் திருக்களந்தை யாதித்தேச்சரத் திருவிசைப்பா அடிகள், இக்களப்பாள், அழலோம்பும் அந்தணர்கள் வாழுமிடம் என்பதையும், இறைவரின் திருப்பெயர் அழகர் (அழகியநாதசுவாமி)என்பதையும் உணர்த்துகின்றன. கயிலாசநாதர்கோயில்,ஆனைகாத்தபெருமாள்கோயில், இவைகளில் உள்ள கல்வெட்டுக்கள் ‘இராசேந்திர சோழவளநாட்டு, புறங்கரம்பை நாட்டு அகரம் முடிவழங்குசோழபுரம்’ என்று இவ்வூரைக்குறிப்பிடுகின்றன. ஆதலின் அந்தணர்கள் இவ்வூரில் இருந்து வருகின்றனர் என்பதைக் கல்வெட்டுக்களும் தரிவிக்கின்றன. இறைவர்க்கு வழங்கிவரும் அழகியநாதசுவாமி என்பதற்கு ஈண்டுக் குறித்துள்ள திருவிசைப்பா அடிகளிலும் சான்று இருக்கின்றது,
1. A.R.E. 1911. Numbers 332 and 339. |