`அந்தணீர்க் களந்தை` அலைபுனற் களந்தை` எனத் திருவிசைப்பாவில் வருவதால், இக்களந்தை நீர்வளம் பொருந்தியது என்று பெறப்படுகின்றது. அதற்கு ஏற்ப இவ்வூர் முள்ளியாற்றுப் பாய்ச்சல் உடையதால் நீர்வளத்துக்குக் குறைவேயில்லை. ஆதலின் இக் களப்பாள் என்னும் ஊரே கருவூர்த் தேவரின் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும். பெரிய களந்தை ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் பதினான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. (A. R. E. 1927 Nos.164 - 177) அவைகளுள் ஒன்று நீங்கலாக (எண் 169) ஏனையவைகள் அனைத்திலும் இறைவன் திருப்பெயர் “ ஆதிபுராணீஸ்வரம் உடைய நாயனார்’’ என்றே குறிக்கப்பெற்றிருக்கிறது. அந்த 169 எண்ணுள்ள கல்வெட்டில் ஆதித்தேச்சுரம் உடையார் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இக் கல்வெட்டு வேறு எங்கிருந்தோ கொண்டு வந்து வைக்கப்பட்டதாகும். கல்வெட்டுத்துறையினரும் இக்கல்லை stray stone எனக்குறித்துள்ளனர். ஆதலின் இப்பெரிய களந்தை திருவிசைப்பாப் பெற்றதன்று. இறைவரின் திருப்பெயர்: ஆதித்தேச்சுவரர்: அழகியநாதசுவாமி. இறைவியாரின் திருப்பெயர்: பிரபாநாயகி. வழிபாடாற்றியவர்:-ஆதித்தசோழன், கூற்றுவநாயனார். இவ்வூரின் சிறப்பு:- கூற்றுவநாயனாரது அவதார ஸ்தலம் இக்களப்பாள் ஆகும். “கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே’’ என்பது திருத்தொண்டர் திருவந்தாதி. கல்வெட்டு வரலாறு: இவ்வூர்க் கோயில்களில் 12 கல்வெட்டுக்கள்1 இருக்கின்றன. இவைகளுள் அழகியநாத சுவாமி் கோயிலின் இரு கல்வெட்டுக்களின் மூலங்கள், தென் இந்தியக் கல்வெட்டுத் தொகுதி எட்டில் வெளிவந்திருக்கின்றன.
1. See the Annual reports on south Indian Epigraphy for the years 1902 - Nos. 656 - 663 1925 - ,, 334 - 337 and S. I. I. Vol. VIII Nos.261 - 268. |