அவைகளுள் ஒன்றினைக் குறிப்பிடுகின்றேன். ஸ்வஸ்திஸ்ரீ கோமாறுபன்மர் திரிபுவனச் சக்கரவர்த்திகள் சிறிகுலசே[க]ர தேவற்கு யாண்டு உயங [வது] உளச- ள் பங்குனிமீ களப்பாள் உடையாற் திருவாதித் தீ [சு]ர முடையாற்கு வாகூருடையார் பிள்ளை காடு [வெ]ட்டியார் மகனார் சொக்க நாய[னா]ர் கட்டின சந்தி ஒன்று. இவற்றால் களப்பாள் என்பது ஊரின்பெயர் என்பதும்,ஆதித்தேச்சரம் என்பது கோயிலி்ன் பெயர் என்பதும் புலப்படுகின்றன. கீழ்க்கோட்டூர் மணியம்பலம் இவ்வூர் தஞ்சை மாவட்டத்தில் திருத்தருப்பூண்டிக்கு வடமேற்கில் 9 மைல் தொலைவில் இருக்கின்றது. ஐராவதத்தின் மணி விழுந்ததால் இக்கோயில் மணியம்பலம் எனப் பெயர் பெற்றது என்பர். இறைவரின் திருப்பெயர்:மணியம்பலவன். இறைவியாரின் திருப்பெயர்: அமுதாம்பிகை. தீர்த்தம்: இந்திர தீர்த்தம். தலத்துக்குரிய மரம்; வன்னி. இக்கோயிலில் கல்வெட்டு இல்லை. சாட்டியக்குடி இவ்வூர் திருக்கீழ்வேளூரிலிருந்து கச்சினம் வழியாகத் திருத்தருப்பூண்டிக்குச் செல்லும் பெருவழியில் இருக்கிறது. சாட்டிய முனிவர் இறைவனைப் பூசித்துப் பேறு பெற்றமையால் இவ்வூர் சாட்டியக்குடி எனப் பெயர் பெற்றது என்பர். இவ்வூர்க்கோயிலில் சாட்டியமுனிவரின் பிரதிமமும் இருக்கின்றது. ஊரின்பெயர் சாட்டியக்குடியாயினும் இங்குள்ள கோயிலுக்கு ஏழ் இருக்கை என்று பெயர். |