இறைவரின் திருப்பெயர் : வேதநாதர். இறைவியாரின் திருப்பெயர் : வேதநாயகி. தலத்துக்குரிய மரம் : வன்னி. தீர்த்தம் :வேதபுட்கரணி. தஞ்சை இராசராசேச்சரம் தஞ்சாவூரின் தொன்மை: தஞ்சாவூர்ச் சில்லாவில் தஞ்சாவூர் என்னும் பெயருள்ள இரண்டு ஊர்கள் இருக்கின்றன. அவைகளுள் க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு மருகல்நாட்டுத் தஞ்சாவூர் என்பது ஒன்று. பாண்டி குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் என்பது மற்றொன்று. இவைகளுள் முன்னது அறுபான் மும்மை நாயன்மார்களில் ஒருவராகிய செருத்துணை நாயனார் பிறந்தபதி. அது நன்னிலம் தாலூகாவில் திருமருகலுக்கு அருகில் உள்ளது, பின்னதுதான் இராசராசேச்சரம் நிலைபெற்றுள்ள ஊர். இத்தஞ்சாவூரில் சிவகங்கைக் குளத்தில் உள்ள தஞ்சைத் தளிக்குளம், தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாகும். இதை அப்பர்பெருமான் திருவீழிமிழலைத் திருத்தாண்டகம் எட்டாம் பாசுரத்தில், தஞ்சைத் தளிக்குளத்தார் என்று வைத்துப் பாடியுள்ளனர். சிவகங்கைக் குளத்தில் தண்ணீர் குறைந்துள்ள காலங்களில் சிவலிங்கம், நந்தி இவைகளை இன்றும் காணலாம். எனவே தஞ்சைத் தளிக்குளத்தை அப்பர் பெருமான் பாடியிருப்பதால் அவரது காலமாகிய கி. பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்தது இத்தஞ்சாவூர். இவ்வூர். அப்பர் பெருமான் காலத்திலேயே தஞ்சை என்று மரூஉ மொழியாக வந்துள்ளது. இவ்வூரில் முதலாம் இராசராச சோழனால் கட்டப்பெற்ற கோயிலே தஞ்சை இராசராசேச்சரம் ஆகும். இருக்குமிடம்: தஞ்சாவூர்ச் சில்லாவில், தஞ்சாவூர்த் தாலூகாவில், தென் ரயில்வே நிலையமாகிய தஞ்சாவூர்ச் சந்திப்பில் இறங்கி, சுமார் ஒன்றரை மைல் தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம். |