45


பாண்டி குலாசனி வளநாடு
வடகரை ராஜராஜ வளநாடு

என்னும்   ஒன்பது  வளநாடுகளாகப்  பிரித்தான்,  அவைகளின்  கீழ்,
நாடுகளும்  கூற்றங்களும்  சதுர்வேதி  மங்கலங்களும்,  தனியூர்களும்
இருந்தன.   இவைகளுள்   கூற்றம்   என்பது  இரண்டு  நாடுகளுக்கு
உட்பட்ட  பிரிவு.  சதுர்வேதிமங்கலம்  என்பது  சில   சிற்றூர்களைத்
தன்னகத்துக் கொண்டது. சதுர்வேதிமங்கலம், தனியூர்  இவ்விடங்களில்
சபைகள்   இருந்தன.  இச்சபையினர்  ஊர்க்காரியங்களைப்   பார்த்து
வந்தனர்.     சிறு    கோயில்களும்    இவர்களின்    ஆளுகைக்கு
உட்பட்டிருந்தது.

காணிக்கடன்  வசூலிக்க  நிலம்  முழுவதையும்  அளக்க  ஏற்பாடு
செய்தான்.   அந்நிலங்களும்  மிகமிக   நுட்பமாய்  அளக்கப்பட்டன.
செல்வ  வளர்ச்சிக்குரிய  கைத்தொழில்கள்,  உழவு,  வாணிபம் இவை
செழித்தோங்க  வகை  செய்தான். மெய்க்கீர்த்தியை முன்னர்  எழுதிப்
பின்னர்ச்  சாசனத்தைத்   தொடங்கும்  வழக்கத்தை  ஏற்படுத்தினான்.
ஊர்ச்சபைகளை   அமைத்து  மக்கள்   ஆட்சிக்கு   அடிகோலினான்.
உடன்கூடத்து   அதிகாரிச்சி  என்ற  பதவியைப்   பெண்மக்களுக்குக்
கொடுத்து  அவர்களும்  அரசியலில்  பங்குகொள்ள வகை  செய்தான்.
இவனது   ஆட்சிச்சிறப்பையும்   பிறவற்றையும்   ஈண்டு   விரிப்பின்
அகலும்,    வரலாற்று    ஆசிரியர்களான     திருவாளர்கள்   T.A.
கோபிநாதராயர்  M.A,. K.A. நீலகண்ட சாத்திரியார் M.A., L. உலகநாத
பிள்ளை,   T.V.  சதாசிவ  பண்டாரத்தார்  முதலானவர்கள்  இவனது
வரலாற்றை   விரித்து   எழுதியிருக்கின்றனராதலின்    இவ்வளவோடு
இதனை நிறுத்துகின்றேன்.

இம்மன்னனது பூதவுடம்பு  நீங்கிற்றாயினும் இவனது புகழுடம்பாகிய
தஞ்சை   இராசராசேச்சரம்1  இன்றும்   நின்று   நிலவுகின்றது,  அது
என்றும் நின்று நிலவுமாறு அதனைப் போற்றிப் புரப்போமாக.


1. “The  Rajarajeswara  temple  at  Tanjore,  which  has
evidently  served  as  a  model for a large number of other
temples  in Southern India , is a stupendous monument of the
religious instruct of this severeign. The enormous endowments
in lands and gold made to the temple show that the king had
one sole object in his later life. Viz., to leave no want of the
temple  unsupplied.’’  (Rao  Sahib H. Krishna Sastri, B.A., S.I.I.
Vol.II Part V. Introduction Page II).