திரைலோக்கிய சுந்தரம் தஞ்சாவூர் ஜில்லா, கும்பகோணந் தாலூகாவில் திருப்பனந்தாளுக்குத் தென்கிழக்கில் சுமார் மூன்று மைல் தூரத்தில் திரைலோக்கி என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரில் இரு கோயில்கள் இருக்கின்றன. அவைகளுள் சுந்தரேஸ்வரர் கோயிலே திருவிசைப்பாப் பெற்ற தலம் என்று கொள்ளப்பட்டு வருகின்றது. இத்தலத்து இறைவனது திருப்பெயர்: சுந்தரேஸ்வரர். இறைவியாரின் திருப்பெயர்: அகிலாண்டேசுவரி. தலத்துக்குரிய மரம்: கொன்றை. கல்வெட்டு வரலாறு: ஏமநல்லூர் _ என்பது ஒரு வைப்புத்தலம். இது ‘‘எச்சில் இளமர் ஏமநல்லூர் இலம்பையங்கோட்டூர்’’1 எனத் தொடங்கும் க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்துத் திருப்பாடலால் விளங்குகின்றது. இந்த ஏமநல்லூர், முதலாம் இராசராசன் காலத்தில் திரைலோக்கியமாதேவி சதுர்வேதிமங்கலம் என்னும் பெயர் பெற்றது2 திரைலோக்கியமாதேவி என்பவர் முதலாம் இராசராசனது தேவியர்களில் ஒருவர். அவர் பெயரால் விளங்குவது இச்சதுர்வேதிமங்கலம்; இது திருலோக்கி என்று வழங்கப்பட்டு இக்காலம் தைலோக்கி என்று மக்களால் அழைக்கப்படுகின்றது. இவ்வூரில், சுந்தரேஸ்வரர் கோயில், கயிலாசநாதர்கோயில் என்னும் இருகோயில்களில் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவை
1. க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகம், திருப்பாடல் 4-இதிலுள்ள எச்சில் என்பது இளமர்க்கு அடைமொழி. இதனை எனக்கு முதல்முதல் தெரிவித்தருளியவர் டாக்டர், உ.வே. சாமிநாதையர் ஆவர். 2. ராஜேந்திரசிம்ம வளநாட்டு மண்ணிநாட்டு ஏமநல்லூராகிய திரைலோக்கியமாதேவி சதுர்வேதிமங்கலத்து சபையார் இடக்கடவ திருப்பரிசாரகஞ் செய்யும் மாண் இரண்டு. S.I.I.Vol.II Part III. Page 317. |