48


கல்வெட்டில் மகேந்திரன்கோட்டூர் என்று  வழங்கப்படுகிறது. ‘‘இப்பரிசு ஒட்டி இப்பொன்  பன்னிரு கழஞ்சுங் கொண்டோம் கஞ்சனூருள்ளிட்ட மகேந்திரன்   கோட்டூர்  சபையோம்’’  என்னும்   திருக்கோடிகாவில் செதுக்கப்பட்டுள்ள கோமாறன்  சடையர்க்கு  யாண்டு 5-ஆவது எனத் தொடங்கும்  கல்வெட்டில்  காண்க. (South Indian  Inscriptions vol XIV The Pandyas. Appendix No.1)

‘கோடைத் திரைலோக்கியசுந்தரனே’ என்பது கொண்டு, கோட்டூரில்
உள்ள  திரைலோக்கிய சுந்தரம் என்னும் இறைவரைக் கருவூர்த்தேவர்
பாடினார் என்று கொள்ளக்கூடாதா எனின்? அவ்வாறும் கொள்ளலாம்.
கோட்டூர்க்கு  மேற்கில்  வயலில்  ஒரு  சிவன்கோயில்  இருக்கின்றது.
அதில்  உள்ள  சிவபெருமானுக்குத்  திரைலோக்கிய  சுந்தரம் என்று
பெயர் இருந்தால் கொள்ளலாம். அதில் கல்வெட்டும் இல்லை, அப்படி
வழக்கத்திலும் பெயர் இல்லை.

‘திருவிசைப்பாவில்   கோடைத் திரைலோக்கிய சுந்தரனே’  என்று
இருப்பது  கொண்டு,  கோட்டூர்க்கு  அருகில் உள்ள திரைலோக்கியே
திருவிசைப்பாப்பெற்ற   தலம்   என்பது  உறுதி  என்றும்,  ஆனால்
அவ்வூரிலுள்ள   இருகோயில்களில்,   கைலாசநாதர்   கோயில்  ஒரு
சிறப்பைப்  பெற்றிருப்பதையும்  காட்டி  அக்கயிலாசநாதர்  கோயிலே
திருவிசைப்பாப்பெற்ற  தலமாகலாம்  என்றும்  இச்சிறு ஆராய்ச்சியில்
கூறியிருக்கிறேன்.  நுண்ணறிவு  உடையார்  ஆய்ந்து  ஒரு முடிவிற்கு
வருவது சைவத்திற்குச் செய்யும் தொண்டாகும்.

முகத்தலை

தஞ்சை     மாவட்டத்தில்   திருத்தருப்பூண்டியிலிருந்து    நாகப்
பட்டினத்திற்குச்  செல்லும்   பெருவழியில், திருத்தருப்பூண்டியிலிருந்து
சுமார்  மூன்று  கல் தொலைவில் உள்ள கொக்காலடி இறங்கி வடக்கே
மானாச்சேரி  செல்லும்  மணல்வழியில்  ஒரு  கல்தொலைவில் உள்ள
பன்னத்தெரு   என்னும்   ஊரே   இம்முகத்தலை   என்னும்   ஊர்;
இவ்வூர்க்குரிய  திருவிசைப்பாவில் மூன்று இடங்களில் பன்னகாபரணா
என  இறைவர் அழைக்கப்படுகின்றனர். ஆதலின் இதுவே  முகத்தலை
என்பர்  சைவ  அன்பர்  திருவாளர்,  தி. கு. நாராயணசாமி நாயுடு
அவர்கள்,

இறைவரின் திருப்பெயர்: பன்னகாபரணர்.

இறைவியாரின் திருப்பெயர்: சாந்தநாயகி.

தலத்துக்குரிய மரம்: புன்னை.