அத்தலத்திலேயே அடியார்கள் பலரோடு மாசிலாமணியீசர் கோயிலுக்குத் தென்புறம் திருமடம் ஒன்று அமைத்துக்கொண்டு தங்கியிருந்தார். ஒருநாள் சேந்தனாரோடு சிதம்பரம் சென்று திருவிசைப்பாப் பதிகங்களால் ஞானமா நடேசனைத் தோத்திரித்து மீண்டும் திருவாவடுதுறைக்கு எழுந்தருளி மாசிலாமணி ஈசரையும் அம்பிகையையும் திருவிசைப்பாப் பதிகம் பாடிப் போற்றி அத்தலத்திலேயே தங்கியிருந்தார். திருமாளிகைத்தேவர் ஒருநாள் காவிரியில் நீராடி, பூசைக்குரிய நறுமலர்களை எடுத்துக்கொண்டு திருமஞ்சனக் குடத்துடன் தம் திருமடத்திற்கு வந்துகொண்டிருந்தார். எதிரே சாப்பாறை முழங்க இறந்தவர் ஒருவரின் உடலைச் சுடலைக்கு எடுத்துக்கொண்டு பலர் வருவதைப் பார்த்தார். வழி குறுகியதாக இருந்தது. விலகிச்செல்வதற்கும் இடமில்லை. பூசைசெய்யும் ஆசாரத்தோடு செல்லும் தமது தூய்மைக்கு இழுக்காகுமெனக்கருதி, திருமஞ்சனக்குடம் முதலியவற்றை ஆகாயத்தில் வீசி அங்கேயே அவைகளை நிற்கச்செய்து, வழியின் மேற்புறத்தில் எழுந்தருளியிருந்த பிள்ளையாரைத் தோத்திரித்தார். பிள்ளையார் அருளால் பிணம் உயிர்பெற்று எழுந்து நடந்து சென்றது. எல்லாரும் வியப்புற்றனர். இவ்வாறு இறந்தவரை எழுப்பித்தந்த அவ்விநாயகருக்குக் கொட்டுத் தவிர்த்த கணபதி என்ற பெயர் இன்றும் வழங்கி வருகிறது. திருமாளிகைத்தேவரை, பிள்ளைப்பேறு இல்லாத அந்தண மாதர்கள் தங்கள் மனத்தால் தியானித்து அவர் அருளால் மகப்பேறு அடைந்தனர். அவர்கள் பெற்ற குழந்தைகள் எல்லாம் திருமாளிகைத் தேவரைப்போலவே இருந்தன. அதனைக்கண்ட அந்தணர்கள் ஐயுற்று அக்காலத்தில் ஆட்சிபுரிந்த காடவர்கோன் கழற்சிங்கன் கி.பி. 825-850 என்னும் பல்லவ மன்னனின் சிற்றரசனான நரசிங்கன் என்ற தங்கள் மன்னனிடத்தில் சென்று முறையிட்டனர். அதைக்கேட்ட நரசிங்கன் சினந்து, திருமாளிகைத் தேவரைக் கட்டி இழுத்து வருமாறு ஏவலர் சிலரை அனுப்பினான். அரசன் ஆணைப்படி அவரைப் பிணித்துவரச் சென்ற ஏவலர்கள் மதிமயங்கித் தங்களில் ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டிக்கொண்டு அரசனை அடைந்தனர். அதைக்கண்டு மேலும் சினமுற்ற மன்னன், படைத்தலைவர்கள் பலரை அழைத்து. தேவரைக்கொண்டு வருமாறு அனுப்பினான். வந்த படைவீரர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாய்ந்தொழிந்தார்கள். இதை அறிந்த மன்னன், நால்வகைச்சேனைக |