உடம்பின்எழு புகைமாற்றிக் கொங்கணர்பாத் திரம்சுவற்றி உணவ தாய் வெந் திடும்பயறு முளைசெய்தெமக் (கு) அருள்திருமா ளிகைத்தேவர் இணைத்தாள் போற்றி. திருவாவடுதுறை ஆதீனத்திருமடத்துள் திருமாளிகைத் தேவருக்குத் தனிக்கோயில் உள்ளது. அவருடைய திரு உருவம் நான்கு திருக்கைகளோடு கூடியதாய் அமைந்துள்ளது. இவர் குரு பணிவிடை செய்யவும் சிவபூஜை செய்தற்பொருட்டும் தமது தவ வலிமையால் வேறு இரண்டு திருக்கைகளை உண்டாக்கிக் கொண்டார் என்பது செவிவழிச் செய்தியாகும். ஸ்ரீ கோமுத்தீஸ்வரருக்கு உச்சிக்கால பூசை முடிந்தவுடன் திருமாளிகைத் தேவருக்கும் அச்சிவாசாரியராலேயே அபிஷேக ஆராதனைகள் செய்விக்கப்பெறுகிறது. அதன் பின்னரே மடாலயத்தில் மாகேஸ்வர பூசை நடைபெறுவது வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. இம்மரபை மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் தனிப்பாடலால் நாம் நன்கு அறியலாம். ‘‘பேசு புகழ்ச்சுப் பிரமணிய தேசிகன்பொன் வீசு கழற்கடியேன் விண்ணப்பம் - நேசம் வருதிரு மாளிகைத்தே வன்பூசை யாயே கருதுபந்தி யாதல்வழக் கம்.’’ திருப்பதிகங்கள்:- திருமாளிகைத்தேவர் தில்லைச் சிற்றம்பலத்துப் பெருமானைப் பாடியனவாகக் காணப்படும் திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் நான்கு ஆகும். காலம்:- தஞ்சையில் இராசராசேச்சரம் என்னும் பெரிய கோவிலை எழுப்பிய இராசராசசோழன் கி.பி. 985-1014 அக்கோயிலின் கைங்கரியங்களுக்குத் தளிச்சேரிப் பெண்கள் (தேவர் அடியார்கள்) சிலரை நியமித்தான். அவர்களில் ஒருத்தி பெயர் ‘‘நீறணி பவளக் குன்றம்’’ என்பதாகும். இத்தொடர் திருமாளிகைத் தேவரின் திருவிசைப்பா முதற்பதிகத்து ஆறாம் பாட்டின் முதல் தொடக்கமாகும். எனவே திருமாளிகைத்தேவரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதிக்கு முற்பட்டது என்பது தெளிவு. இவரது காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம். |