58


எழுந்தருளி     வரும்   திருத்தேர் ஓடாது தடைப்பட்டு நின்றிருந்தது.
அதுகண்ட  சேந்தனார்  இறையருளால் திருப்பல்லாண்டு பாடி,  தானே
அத்தேர் ஓடி நிலைக்கு வருமாறு செய்தார்.

சேந்தனார்    திருக்கடவூருக்கு அண்மையில் உள்ள திருவிடைக்கழி
என்னும்  தலத்தை  அடைந்து,   கந்தவேளை  வழிபட்டுக்   கொண்டு,
அங்கேயே  ஒரு  திருமடம்   அமைத்து வாழ்ந்து வந்தார்.  சேந்தனார்
திருமடத்துக்கு   அக்காலத்து    மன்னன்   நிலமளித்து    உதவினன்.
அந்நிலப்   பகுதி   உள்ள     இடம்   சேந்தன்   மங்கலம்   என்று
வழங்கப்பட்டது.     இச்செய்தி     திருவிடைக்கழிப்     புராணத்தில்
கூறப்பட்டுள்ளது.   இவ்வூர்    திருவிடைக்கழிக்கு  அருகில்  இன்றும்
இப்பெயருடன் இருக்கின்றது.  இவ்வூரில் இருந்த சேந்தனார்  வழிபட்ட
திருக்கோயில்   அண்மைக்    காலத்தில்   அழிந்துபட்டது.   அங்குக்
கிடைத்த  சிவலிங்கத்   திருவுருவத்தை மட்டிலும் அவ்வூரின்  அருகில்
உள்ள  விசலூரில், சிறு  கோயில் எடுத்து எழுந்தருளச்  செய்துள்ளனர்.
சேந்தன் மங்கலம் இன்று  முகமதியர்களின் உறைவிடமாக உள்ளது.

கருத்து வேற்றுமைகள்:-

சேந்தனார்     செப்புரை   என்னும்   ஊரைச் சேர்ந்தவர் என்றும்
திருவீழிமிழலை  என்னும்  ஊரில் தோன்றியவர்    என்றும் கூறுவாரும்
உளர்.   திருவிசைப்பாப்   பாடிய  சேந்தனார்    திருவீழிமிழலையைச்
சேர்ந்தவர்  எனவும், திருப்பல்லாண்டு பாடிய   சேந்தனார் நாங்கூரைச்
சேர்ந்தவர் எனவும் துடிசைக் கிழார் கூறுவர்.

முதல்     இராசராசசோழன்    (கி.   பி   985-1014)   ஆட்சியில்
திருவீழிமிழலைக்   கோயிலில்   திருநந்தாவிளக்கு  வைத்த   ஜயந்தன்
என்பாரைச்   சிவஞானி    என்றும்,   திருமாளிகைத்தேவர்   என்றும்
கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது.  ஜெயந்தன் என்ற பெயரின்  திரிபே
சேந்தன்   என  மருவிற்று   என்றும்,  சேந்தனாரும்   திருமாளிகைத்
தேவரும்  ஒருவரே   என்றும்  மு.  இராகவ  அய்யங்கார்  அவர்கள்
கூறுவர்.   இவ்வாறு    கருதுவதற்குக்   காரணம்,   திருவிசைப்பாவில்
திருமாளிகைத்தேவர்    அருளிய   நான்கு   பதிகங்களை    அடுத்து,
சேந்தனார்     பாடிய        திருவிசைப்பாப்பதிகங்கள்     மூன்றும்
அமைந்திருத்தலாலும்,     கடைசித்திருப்பதிகத்தின்  இறுதிப்  பாடலில்
சேந்தன்   என்ற  பெயர்   குறிக்கப்பெற்றிருப்பதாலும்   இப்பதிகங்கள்
அனைத்தையும்   ஒருவரே   பாடியிருத்தல்  கூடும்   எனக்  கருதுவர்.
இக்கருத்து   பலராலும்   ஏற்றுக்   கொள்ளப்படவில்லை    என்பதும்
குறிப்பிடத்தக்கது.