மறைபல ஓதுநாவன் வண்புருடோத்தமன்’’ என்று கூறிக் கொள்வதால் இவர் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றியவர் என அறியலாம். வைணவ குலத்தில் தோன்றிச் சிவபெருமானிடத்துப் பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர் இவர். நம்பி என்பது இவரது சிறப்புப் பெயர். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர். தில்லையில் எழுந்தருளியுள்ள நடராசப்பெருமானையே வழிபட்டுக்கொண்டு சிதம்பரத்திலேயே வாழ்ந்துவந்தவர் என்பர். புருடோத்தமநம்பி அருளிச்செய்த திருவிசைப்பாப்பதிகங்கள் இரண்டு. இவை கோயில் என்னும் சிதம்பரத்தைப்பற்றியனவேயாகும். இவரைப்பற்றிய பிற செய்திகள் அறியக்கூடவில்லை. 9. சேதிராயர் திருவிசைப்பாவை அருளிச்செய்த ஆசிரியர்களில் ஒன்பதாமவராகத் திகழ்பவர் சேதிராயர். இவர் சேதிநாட்டை ஆண்ட குறுநிலமன்னர். (சேதியர்-ஒருவகை மரபினர்) சேதியர் ஆண்ட நாடு சேதிநாடு எனப்பெறும். இந்நாடு தென்னார்க்காடு மாவட்டத்தின் வடமேற்கில் உள்ள நடுநாட்டில் ஒரு சிறு பகுதி. தொண்டைநாட்டிற்கும் சோழநாட்டிற்கும் நடுவே உள்ள நாடு. நடுநாடு எனப்பெறும். சேதிநாடு மலையமான் நாடு எனவும் வழங்கப்பெறும். சேதிநாட்டுக் குறுநிலமன்னர் சேதிராயன், மலையகுலராசன் என்னும் பட்டங்களை உடையவர்கள். சேதிநாட்டின் தலைநகரம் திருக்கோவலூர், கிளியூர் என்பன. கிளியூரைத் தலைநகராகக்கொண்டு அரசாண்டவரே சேதிராயராவர். சேதிராயர் தம்மை ‘ஏயுமாறெழிற் சேதியர்கோன்’ என்று கூறிக்கொள்கின்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகளை அவருடைய தந்தையாரிடமிருந்து கேட்டுப் பெற்று அபிமானப் புதல்வராக வளர்த்த நரசிங்கமுனையரையர் வழியில் வந்தவர் சேதிராயர் என்பர். சேதிராயர் தம்முன்னோர்களைப் போலவே சிவபக்தி, அடியார் பக்திகளில் சிறந்து விளங்கினார். பல சிவதலங்களுக்கும் சென்று வழிபட்டார். |