வரும் பாடல்கள் அனைத்தினுள்ளும் வரும் எல்லா நலங்களையும் எடுத்துரைத்தல் இங்கு நோக்கம் அன்று; எனினும், ஒன்பதாம் திருமுறையில் ஒரு பகுதியாக விளங்கும் இவ்வுயர் பெருங்கவிதைகளும், ஏனைய அருளாளர் பாடல்களும் இசையமைதி பொருந்திய எழிற்பாடல்களாகத் தெய்வநலம் பெருக்குகின்றன. திருமாளிகைத் தேவர்: திருமாளிகைத் தேவர் கவிதைகள் திருவிசைப்பாக்களில் முதலாவது தொகுப்பாகக் காணப்படுகின்றன. இத் தொகுப்பு நான்கும் ‘கோயில்’ பொருளாக எழுந்தனவேயாம். பஞ்சமப் பண்ணில் முதன்மூன்றும், காந்தாரப் பண்ணில் நான்காவதுமாக நான்கு பதிகங்கள் இதன்கட் காணப்பெறும். ‘ஒளிவளரும் விளக்கே! அழியாத ஒப்பற்ற பொருளே! உணர்வின் சூழ்நிலையைக் கடந்த உணர்வே! தெளிவான பளிங்கின் திரண்ட குன்றமே! சித்தத்துள் தித்திக்கும் தேனே! அன்புவளரும் உள்ளத்து இன்புறும் கனியே! அம்பலத்தை ஆடும் அரங்கமாகக் கொண்டு, அப் பெருவெளியிலே தெய்வக்கூத்து உகந்தாடும் பெருமானே! உன்னைத் தொண்டனேன் விளம்புமாறு நீ உண்ணின்று விளம்புவாயாக.’ என்று தொடங்கிக் கனிகின்றார் தேவர்.1 இதனுள் வரும் ‘விளம்புமா விளம்பே’ என்ற தொடர் ஆன்மவியல்பு விளக்குவதாகும். இவ்வாறே இப்பதிகத்தில், ‘பணியுமா பணியே’ என்றும், ‘கருதுமா கருதே’ என்றும், ‘உரைக்குமாறுரையே’ என்றும், ‘நணுகுமா நணுகே’ என்றும், ‘இசையுமாறிசையே’ என்றும், ‘நுகருமா நுகரே’ என்றும், ‘புணருமா புணரே’ என்றும், ‘தொடருமா தொடரே’ என்றும், விரும்புமா விரும்பே’ என்றும், ‘நினையுமா நினையே’ என்றும் ஏனைய பாடல்களில் இயம்பும் தொடர்கள் அனைத்தும் இப்பொருளவே ஆம்.2 இறைவன் அறிவித்தாலன்றி அறியும் இயல்பு இல்லாதவை உயிர்கள் ஆதலின், யான் விளம்புதற்கும், பணிதற்கும் முதலிய எச் செயற்கும் நீ என்னுள் நின்று கூட்டினாலொழிய யான் செயலற்றவனே என்று திருமாளிகைத்தேவர் கூறும் பொருள் நுட்பம், சாத்திர அடிநிலைக் கொள்கையாகவே உள்ளது.
1. திருவிசைப்பா, பா-1. 2. திருவிசைப்பா, பா-2.11. |