சிதம்பரப் பதிதான். அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதாய் கல்லால் நிழலாய் கயிலை மலையாய்க் காண அருள் என்று பல்லாயிரம் பேர் பரவித்தொழும் பெருமையுடையது இப் புலியூர். ‘‘கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லை’’ என்ற ஞானசம்பந்தப் பெருமானின் வாக்கைத் திருவிசைப்பாவும் உறுதி செய்கிறது. ‘‘ஓமதூமப் படலத்தின் பெயர்நெடு மாடத் தகிற் புகைப்படலம் பெருகிய பெரும்பற்றப் புலியூர்’’ ‘‘ஓமப்புகையும் அகிலின் புகையும் உயர்ந்து முகிறோயத் தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு சிற்றம்பலம்’’ என்று திருமாளிகைத் தேவரும், திருவாலியமுதனாரும் தில்லைப்பதியின் பெருமையைப் பறைசாற்றுகிறார்கள். ஒலியாலும் ஓங்கியது: காஞ்சிபுரமும் கடலும் இணைத்தெண்ணும் நிலைக்கு வந்தால் கச்சியே பெருமையில் விஞ்சும் என்றொரு பாடல் உண்டு. ‘‘மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்முள் ஒலியும் பெருமையு மொக்கும்-மலிதேரான் கச்சிபடுவ கடல்படா கச்சி கடல்படுவ வெல்லாம் படும்’’ என்னும் புகழ் இதோ தில்லைக்கும் உண்டு என்கிறது திருமுறை. ‘‘தேர்மலி விழவிற்குழ லொலி தெருவிற் கூத் தொலியேத் தொலி யோத்தின் பேரொலி பரந்து கடலொலி மலியப் பொலிதரும் பெரும்பற்றப் புலியூர்’’ -பா-15 ‘‘தேரார் விழ வோவாத் தில்லைச் சிற்றம்பலவர் -பா-271. |