அனநடை வாய்ந்து வல்லியினொல்கும் அவளடிக்கீழ் என்னுயிர் தங்கியது எனக்கூறும் கோவைத் தலைவன் கருத்திற்கும் திருவளர் தெய்வப்பதிக்குத் தலைவனாகிய சிற்றம்பலக் கூத்தனின் சிலம்பொலிக்கும், சீறடியில் என் சிந்தை இடங்கொண்டது என்று எடுத்தியம்பும் திருமாளிகைத்தேவரின் கருத்திற்கும் எத்துணைப் பொருத்தம். கோவையின் சொல்லையும் பொருளையும் பொன்னேபோல் போற்றிக் கொண்டாடும் அப்பக்தி நெஞ்சினைப் போற்றுவோம். இன்னும் இவரது கருத்து, ‘‘எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை யுனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க’’ என்னும் திருவாசக அடிகளில் ஊறித்திளைத்து ‘‘திருநீறிடா வுருத் தீண்டே னென்னும்’’ என்றும் ‘‘உற்றா யென்னும் உன்னையன்றி மற்றொன்று உணரே னென்னும்’’ என்றும் உருவம் பெறும். இறைவனே வந்து தலையளித்து ஆண்டுகொண்ட சிறப்பை வாதவூரர் இயலுமிடங்களிளெல்லாம் வியந்து பேசுவார். ‘‘அறிவிலாத எனைப்புகுந் தாண்டுகொண் டறிவதை யருளிமேல் நெறியெ லாம்புல மாக்கிய எந்தையைப் பந்தனை யறுப்பானை’’ எனப் பாராட்டுவார். ‘‘வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மேலாகப் பதைத்துருகு மவர்நிற்க என்னை யாண்டாய்’’ என்று தெரிவிப்பார். ஆட்கொண்ட சிறப்பை ஒன்பதாம் திருமுறை கீழ்க்கண்டவாறு விளக்கும். |