‘‘அக்கனா வனைய செல்வமே சிந்தித் தைவரோ டழுந்தி நானவமே புக்கிடா வண்ணங் காத்தெனை யாண்ட புனிதன்’’ பா-51. ‘‘என்னையுன் பாதபங்கயம் பணிவித் தென்பெலா முருகநீ யெளிவந் துன்னையென் பால்வைத்தெங்கு மெஞ்ஞான்று மொழிவற நிறைந்த வெண்சுடரே’’ பா-119. ‘‘பாம்பணைத் துயின்றோ னயன்முதற்றேவர் பன்னெடுங் காலநிற் காண்பா னேம்பலித்திருக்க வென்னுளம் புகுந்த எளிமையை யென்றுநான் மறக்கேன்’’ பா-145. அதோடுகூட ‘கலைகள் தம் பொருளும் அறிவுமாய் என்னைக் கற்பினிற் பெற்றெடுத்து எனக்கே, முலைகள் தந்தருளும் தாயினும் நல்ல முக்கணான்’ - என்ற உள்ளுணர்வு ‘‘நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே’’ என்றும் ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்றும் எழிலோடு வரும் திருவாசகத்தைப் படித்தபின் எழுந்ததுதானே. ‘அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரி’ என்று மணிவாசகர் விரும்புவதுபோலவே கருவூர்த்தேவரும், ‘‘கண்பனி யரும்பக் கைகள்மொட்டித் தென் களைகணே யோலமென் றோலிட் டென்பெலா முருகு மன்பர் தங்கூட்டத் தென்னையும் புணர்ப்பவன்’’ என்று கூறுகிறார். |