பாதகத்துக்குப் பரிசு வைத்தான்: நற்செயல்கள்தாம் உலகில் பாராட்டுப்பெறும்; இது இயற்கை. பித்தன்என்று பெயர்படைத்த பெருமான் பொல்லாங்கிற்கும் பரிசு தருகிறானே! இதனை என்னேன்று சொல்வது? அன்னையையும் தந்தையையும் முன்னறி தெய்வமாக வணங்குவது போக-சண்டேசுரர் தந்தையின் காலைத் தடிந்து ஈறிலாப்பதம் பெற்றார்; பாதகத்திற்கு இவனையன்றிப் பரிசு தருவோர் யார்? ‘‘தீ தில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச் சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப் பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்’’ -மணிவாசகர். தண்டியலங்காரத்தில் இச் செயல், ‘‘தலையிழந்தா னெவ்வுயிரும் தந்தான் பிதாவைக் கொலைபுரிந்தான் குற்றங் கடிந்தான்-உலகில் தனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவரேற் றப்பாம் வினையும் விபரீத மாம்.’’ என்று குறிக்கப்படுகிறது. சேந்தனாரோ, ‘‘தாதையைத் தாளற வீசிய சண்டிக்கு அண்டத் தொடுமுடனே பூதலத் தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமும் அருளிச் சோதிமணி முடித்தாமமு நாமமுந் தொண்டர்க்கு நாயகமும் பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே’’ என்று அல்லாண்ட கண்டனுக்குப் பல்லாண்டு பாடுகிறார். வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையாகி இன்மையாகி இலங்கும் இறைவனை, |