என்றும் உள்ளொளி, வாக்கில் தெரிய வார்த்தை பேசும் வாதவூரரையன்றோ பிரதிபலிக்கின்றன. கருதுவார்கருதும் உருவமுடையான்: சுருதிவானவனாக-திருநெடுமாலாக-சுந்தர விசும்பின் இந்திரனாக, பரிதிவானவனாக, படர்சடை முக்கட் பகவனாக எருது வாகனனாக, எயில்கள் மூன்றெரித்த ஏறு சேவகனாகப் பின்னும் கருதுவார் கருதும் உருவங்கொள்வான் பங்கைகொண்ட சோளேச்சரத்தான் என்கிறது திருவிசைப்பா. இக் கருத்து கம்பரின் பாடலில் எழிலுருக் கொள்ளுகிறது. ‘‘ஒன்றே என்னில் ஒன்றே யாம் பலவென் றுரைக்கிற் பலவே யாம் அன்றே என்னில் அன்றே யாம் ஆம்என் றுரைக்கில் ஆமே யாம் உண்டே என்னில் உண்டே யாம் இலதென் றுரைக்கில் இலதே யாம் நன்றே நம்பி குடிவாழ்க் கை நமக்கிங் கென்னோ பிழைப்பம் மா!’’ உலகில் பல நோய்களால் மனிதர்களாகிய நாம் துன்புறுகிறோம். அதில் ஒருநோய் காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும். இந்நோய்க்கு மருந்து மாதரே. பிணிக்கு மருந்து பிறஆகலாம். அணியிழை தன்னோய்க்குத் தானேதான் மருந்து என்பார் வள்ளுவர். இந்நோய்க்கு மருந்து தேடி மாயையில் சுழலும் உலகமே! பிறவி நோய்க்கு நீ என்ன மருந்து கண்டாய்! சிறிதே எண்ணிப்பார்! வைதாலும் வாழ்த்தினாலும் ஒன்றே என்று மடிதற்று முந்துகின்ற பரம்பொருளின் அருளைப்பெற என்ன வழி கண்டாய்! தண்ணிலவு முடித்த தூயவன் எத்துணை எளிவந்த கருணையாளனாக விளங்குகிறான்? ‘‘தத்தையங் கனையார் தங்கண் மேல்வைத்த தயாவை நூறாயிரங் கூறிட்டு அத்திலங்கொரு கூறுன்கண் வைத்தவருக்கு அமருல களிக்கு நின் பெருமை’’ |