92


‘‘மடைகொள் வாளைகள் குதிகொளும் வயற்றில்லை
   யம்பலத் தனலாடும்
உடைய கோவினை யன்றி மற்றாரையு
   முள்ளுவ தறியேனே.’’ 
                                  -பா - 232.

திருநுதல்விழியும்- பவளவாயிதழும்  -   திலகமுமுடையவன்  சடைமேல்
புரிதரு  மலரின்  தாது  நின்றூதப்  போய்வரும்  தும்பிகளே!   நீங்கள்
கீழ்க்  கோட்டூர்  மணியம்பலப்  பெருமானின் திருமார்பிடை   மலர்ந்த
பூவில்    தேன்நக்கி    வருவீரானால்-வரும்   போது    அவனுடைய
திருவடிகளைத் தழுவிக் கொண்டிருக்கின்ற என்மனத்தையும்    கொண்டு
வாருங்கள் என்கிறாள் அன்புவயப்பட்ட ஒரு அணங்கு. (பா-103)

என்னுள்ளே     புகுந்தவனை  இனிப்  போக  விடுவேனோ!  என்
நெஞ்சக்  கோயிலின் கதவைத் திறந்தால்தானே அவன்    புறப்படுவான்.
அவனைச்  சிக்கெனப்பிடித்து   சிறைப்படுத்திவிட்டேன்  என்று    ஒரு
பேதை மங்கை பேசுகிறாள்.

‘‘மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
   மிழலையுள் வீங்கு வெண்பளிங்கின்
பொன்னடிக் கடிமை புக்கினிப் போக
   விடுவனோ பூண்டு கொண்டேனே.’’
                                      -பா.49.

இயற்கை தந்த பரிசு:

நீரிடை     சங்கமும், நிழலிடை  மேதியும், போரிடை   அன்னமும்,
பொழிலிடைத் தோகையும், தூரிடை ஆமையும், துறையிடை   இப்பியும்,
தாரிடை  வண்டும்,  தாமரையில்  செய்யவளும்  உறங்குகிறாள்  என்று
நாட்டுவளங் காட்டுவார் கவிச்சக்ரவர்த்தி.

நன்றாக     மேய்ந்த மேதி நிழலில் உறங்குவதனால் நீரில் சங்கமும்,
போரில்  அன்னமும்  உறங்க  முடிந்தது.  தாமரையை விட்டு   வண்டு
தோளில்  கிடக்கும்  தாரில்  உறங்குவதனால் தாமரையில்   செய்யவள்
துயில்  முடிந்தது.  இப்படி  ஒன்றுள் ஒன்றாக-அனைத்துமே   நாட்டின்
செல்வக் கொழிப்பைக் காட்டுவதாகக் கூறுவார்.