கழனியும் பொழிலும் தழுவிய எழிலை நாட்டு வளமாகவும் திங்களைத் தீண்டும்படி உயர்ந்த மாட மாளிகைகளை நகர் வளமாகவும் காட்டும் திருவிசைப்பாவின் சுருங்கிய அடிகள் நமக்கோர் அரிய விருந்து. ‘‘கங்கை நீ ரரிசிற்கரை யிருமருங்குல் கமழ்பொழில் தழுவிய கழனித் திங்கணேர் தீண்ட நீண்ட மாளிகைசூழ் மாட நீடுயர் திருவீழி’’. பா-52. அச்சமில்லை அறந்தழைத்தது: அணங்காலும், விலங்காலும், கள்வராலும், மன்னனாலும், வரும் அச்சம் என்பார் தொல்காப்பியர். ‘‘அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே.’’ -தொல்-மெய்ப்பாட்டியல். அறந்தழைக்கும் நாட்டில் வேலொடு நின்றான் இடுவென்றது போலக் கோலொடு நின்றான் இரக்கமாட்டான். அங்கே பொய்யும் திருட்டும் புரட்டுமிருக்காது. ஆனால், கருவூர்த் தேவர் கீழ்க்கோட்டூரிலே அச்சம் குடிகொண்டுள்ள பான்மையைப் பாடுகிறார். என்ன அச்சம்! யாரால் எப்படி விளைந்தது என்று வியக்கிறீர்களா? இதோ அக் காட்சி. ‘‘கேதகை நிழலைக் குருகென மருவிக் கெண்டைகள் வெருவு கீழ்க் கோட்டூர்.’’ என்பதுதான் அது. ஐயகோ, இங்கே நிற்பது கொக்கல்லவோ என்று தாழையின் நிழலைக் கண்டு பயந்த மீனினங்கள் பாய்ந்தோடின. ‘‘வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ முழுகிய தென்றஞ்சிமுது மந்தி-பழகி எழுந்தெழுந்து கைந்நெரிக்கும் ஈங்கோயே திங்கட் கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.’’ |