பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை108

கள்ளிய புக்காற் கவிகளொட் டார்; கடல் நஞ்சயின்றாய்
கொள்ளிய அல்லகண் டாய்;புன்சொல் ஆயினுங் கொண்டருளே,

193.அருளால், வருநஞ்சம் உண்டுநின் றாயை, அமரர்குழாம்
பொருளார் கவிசொல்ல, யானும்புன் சொற்கள் புணர்க்கலுற்றேன்;
இருளா சறவெழில் மாமதி தோன்றவும் ஏன்றதென்ன
வெருளா தெதிர்சென்று மின்மினி தானும் விரிகின்றதே.


இல்லை. ஆயினும் ஆசையால் உன்மேல் இனிய கவிகளைப் பாடத் தொடங்கிவிட்டேன். அவற்றிற்கு 'ஏற்ற விளக்கமான சொற்கள் இவை' என்பதையும் அச்சொற்கள் என்னென்ன பொருள்களைத் தரும் என்பதையும் அறிவினால் பெறப் பெற்றே னில்லை. பழமையாகப் பாடினவர்களுடைய கவிகளிலிருந்து அவற்றைக் களவு செய்து கொள்ளப் புகுந்தால், அவர்களே, அல்லது அக்கவிகளைக் கற்று வல்லவர்களோ அதற்கு இடங் கொடுக்க மாட்டார்கள். ஆகவே, ஆசையால் வாய்க்கு வந்ததைக் 'கவி' என்று சொல்லிப் பாடுகின்ற பாடல்கள் அறிவுடையோரால் கொள்ளத் தக்கன அல்ல. அவை மிகப் புல்லிய சொற்களாயினும் ஏற்றருள்; நீ கடலில் தோன்றிய நஞ்சினையும் உண்ட பெருமான் அல்லையோ!

குறிப்புரை: 'அந்நஞ்சினுமா என் கவிகள் கொடியன' என்பது குறிப்பு. கள்ளிய - களவு செய்ய. கவிகள் - கவிபாடு வோர். கொள்ளிய - கொள்ளப்படுவன. கண்டாய், முன்னிலை யசை. "நஞ்சயின்றாய்" என்பது உடம்பொடு புணர்த்தது ஆகலின், அதனை வேறு வைத்து, இவ்வாறு பொருள் உரைக்கப்பட்டது. 'பாடிப் பரவும் ஆசையுடையாரை அவர்க்கு அவ்வன்மையின்மை பற்றி இகழாது, அன்பு பற்றி ஏற்றுக் கொள்ளவே செய்வான் என்பதும், 'அவன் நஞ்சுண்ட செயல் இதனைக் குறிக்கும் குறிப்பும் ஆகும்' என்பதும் கருத்து.

193. பொழிப்புரை: (பெருமானே) இருளாகிய குற்றம் நீங்கும்படி இரவில் அழகு பொருந்தி நிறை நிலாத் தோன்றி விளங்கினாலும், சிறிய மின்மினிப் பூச்சியும் அஞ்சாது அதன் எதிரே சென்று, 'எனது ஒளியும் இருளை விழுங்கும்' எனக் கருதித் தனது ஒளியால் சிறிது விளங்கிநிற்கின்றது. அதுபோல, பாற்கடலினின்றும் தோன்றித் தேவரைத் துரத்தி வந்த நஞ்சினை அவர்கள் மேல் வைத்த கருணையால் உண்டும் இறவாதிருக் கின்ற உனது கருணை மிகுதியைப் பொருளாக நிரப்பி அத்தேவர் கூட்டம் உயர்ந்த கவிகளைப் பாட, நானும் 'கவிகள்' என்ற பெயரில் சில சிறுசொற்களைக் கோக்கின்றேன்.